(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம்
கடந்த வாரம் இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபவனியும் போராட்டமும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. இப்போராட்டத்திற்கு முஸ்லீம்களிடம் இருந்து கிடைத்த ஏகோபித்த ஆதரவு இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கெதிராக போராட வேண்டும் என்ற குரல்களுக்கு வலுச்சேர்த்துள்ளது. தேசிய அரசியலில் P2P போராட்டத்திற்கு கட்சிபேதமின்றி தமிழர்களும் முஸ்லீம்களும் வழங்கிய ஆதரவு முக்கிய பேசுபொருளானது. ஆனால் வெற்றிகரமாக இப்போராட்டம் முடிவுக்கு வந்தபோதும் இதன் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதில் தமிழ்த்தேசியக் கட்சிகள் தங்களுக்குள் முரண்பட்டு நிற்கின்றன. இது பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள், சேறுபூசல்கள் எனப் பல பொதுவெளியில் அரங்கேறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது வருந்தத்தக்கது.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் இந்தப் போராட்டம் குறித்த செய்திகளை சிங்களப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தன என்பதாகும். இலங்கையின் பத்திரிகைச் செய்திகளை ஆய்வு செய்கின்ற Verité Research நிறுவனம் இதைத் துல்லியமாக அவதானித்துள்ளது. பார்க்க (image)


இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் “அமைதியான போராட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியமான உரிமை. இந்தப் போராட்டங்களைத் தமிழ்ப்பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய மொழிப்பத்திரிகைகள் பிரசுரிக்காமை ஆச்சரியமளிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பார்க்க (image)

இப்பேரணியின் நிறைவுநாளில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. நிறைவுநாள் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் தனது அனுபங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். அக்குறிப்பு முக்கியமான ஒரு குறிப்பாகும். பார்க்க: https://www.facebook.com/100003684532159/posts/
2137895746343222/

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் தொடர்பான குறிப்பொன்று மூத்த அரசியல் விமர்சகரால் தினக்குரல் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது.
பார்க்க (image)

இந்தப் போராட்டம் இப்போது அதன் அடுத்த கட்டத்தை வேண்டி நிற்கின்றது. இது தொடர்பில் வெளியான கட்டுரையொன்று சில முக்கியமான செய்திகளைச் சொல்கிறது. பார்க்க: https://bit.ly/3rX2fp0

முஸ்லீம்களின் உடல்களைப் புதைப்பது தொடர்பில்
கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், “நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அப்படியாயின், மரணமடையும் முஸ்லிம்களை புதைப்பதற்கு இடைமளிப்பீர்களா” என வினவினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ புதைப்பதற்கு இடமளிப்போம்” என்றார். இது மிகப்பெரிய பேசுபொருளாகியது.
மறுநாள் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஒரு கேலிச்சித்திரம் இலங்கைப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. பார்க்க (image)


ஜெனிவா நடைமுறைகளில் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் ஏனைய நட்பு நாடுகளின் துணையுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் காய்நகர்த்தல்களின் ஒரு பகுதியாகவே கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக விடுத்துள்ள அறிவிப்பை கருதவேண்டுமே தவிர முஸ்லிம்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட விடயமாக நோக்கமுடியாது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷீரின் ஷரூர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை, மனித உரிமைகள், ஜெனீவா
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெப்ரவரி 22ம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார். இலங்கைக்கு எதிராக ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரத்தை மேற்கோள் காண்பித்து சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவாவிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் 46வது அமர்வில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதை பிரித்தானியா உறுதி செய்துள்ளது. ஜெனீவாவிற்கான பிரிட்டனின் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு கடந்த திங்கட்கிழமை இதனை அறிவித்துள்ளார்
கடந்தவாரம் நிகர்நிலை கலந்துகொண்ட பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போர்க்குற்ற விவகாரத்திற்குப் பொறுப்பான அமெரிக்க சிறப்புத்தூதுவராக திகழ்ந்த ஸ்டீபன் ராப் இலங்கையின் இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலை செய்யப்பட்டார்கள் என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடத்தில் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இதே கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி செயலாளர் நாயகமும் திகழ்ந்தவரும் இலங்கையில் போர்க்காலத்தில் ஐ.நாவிள் நடத்தை பற்றி ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக செயற்பட்டவருமான சாள்ஸ் பெற்றி இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நீதிக்காக மக்கள், ஐக்கிய நாடுகள் சபையை தங்கியிருந்தால் அவர்கள் ஏமாற்றமடைய நேரிடும் எனத் தெரிவித்தார். மேலும் மக்கள் நீதிக்காக ஐநாவில் நம்பியிருக்கக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விடயத்தில் தீர்மானமாக நடவடிக்கை எடுப்பதற்காக துணிவை ஐநா கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் முழுமையான காணொளியைக் காண: https://www.youtube.com/watch?v=6x12DQ4tn6o

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்
2019ம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காவிடின் சர்வதேச விசாரணை கோரப்படும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அரசாங்கத்திடம் இருந்து உரிய நீதியை எதிர்பார்ப்பதாகவும் இலங்கையில் நீதி கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்று நீதியைப் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். சில காலத்துக்கு முன்புவரை கர்தினால் அவர்கள் இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என தொடர்ந்து அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியில் குரல்கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிபிசியின் சிங்கள சேவை இத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவு உறுப்பினர்களை மேற்கோள் காட்டி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சகரான் இல்லை என்றும் இத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் கரங்கள் இருப்பதாகவும் ஆணைக்குழு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திக்கு: https://www.newsfirst.lk/2021/02/08/india-behind-april-attacks-bbc-report-raises-concerns/