(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு 15 - 21 feb. 2021)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இந்தவாரம் தொடங்கவுள்ளது. இம்முறை முக்கிய கவனம் குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் வரைவு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பார்க்க (PDF-1),

ஆங்கிலத்தில் (UNHRC ENGLISH) இந்த வரைவுப் பிரேணை சில தரப்புகளிடமிருந்து வரவேற்பையும் சில தரப்புக்களிடமிருந்து எதிர்ப்பையும் பெற்றுள்ளது. குறித்த வரைபில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தும் பரிந்துரைகள் எதுவும் இடம்பெறவில்லை. குறித்த வரைவானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காரியாலயத்தினதும் ஆணையாளரினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாக குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிப்பதாகத் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வரைவு திருப்தியளிக்கவில்லை எனவும் ஏமாற்றம் தருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இப்போது வெளியாகிய வரைபு நிச்சயம் எதிர்வரும் காலத்தில் மாற்றத்துக்கு உள்ளாகும். எனவே இந்த வரைபில் திருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அது இலங்கையில் நீதியையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கானதாகவும் அரசைப் பொறுப்பாளியாக்குவதாக இருக்கும் என்பது ஜயமே. தமிழ் மக்கள் இனியாவது ஜெனீவாவைக் கடந்து சிந்திக்க வேண்டும். ஜெனீவாவுக்கு அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் விரிகிற கட்டுரையொன்று தமிழ்மக்கள் சிந்திப்பதற்கான சில வினாக்களைத் தொடுத்துள்ளது. பார்க்க: https://bit.ly/3rX2fp0

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கவனம்
இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பில் சர்வதேச ரீதியில் நன்கறியப்பட்ட அமைப்புகள் கடந்தவாரம் முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இலங்கையில் இலங்கையில் நலிவடைந்து வரும் மனித உரிமைகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்கக் கூடாது. தண்டனையிலிருந்து விலகும் சுழற்சித் தொடரை முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கை அரசாங்கத்தை முழுமையாக பொறுப்புக்கூற வைத்திருப்பதற்கு மனித உரிமை பேரவை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) கோரிக்கை விடுத்துள்ளது. 'புதிய ஆடையில் பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்ட இலங்கை” (Old ghosts in new garb: Sri Lanka's return to fear) என்ற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டவர்களின் குரல்வளைகளை நசுக்கிவருவதுடன் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீதியைப் பெறுவதற்கு தடங்கல்களை ஏற்படுத்திவருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. அறிக்கையைப் பார்க்க: https://www.amnesty.org/en/documents/asa37/3659/2021/en/ அந்த அறிக்கையின் தமிழாக்கம்: பார்க்க (PDF-2)
இதேவேளை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குனர் மீனாட்சி கங்குலி “இலங்கையில் அதிகரிக்கும் உரிமை நெருக்கடி” (A Growing Rights Crisis in Sri Lanka) என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையொன்றை கடந்த வாரம் இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகையில் எழுதியிருந்தார். அதில் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவதாகவும் அதைத் தடுத்து நிறுத்தவும் மக்களைக் காக்கவும் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அதில் தீர்மானகரமான பங்களிப்பை இந்தியா ஆற்றவேண்டும் என்றும் கோரியுள்ளார். மூலக்கட்டுரை: https://www.hrw.org/news/2021/02/18/growing-rights-crisis-sri-lanka தமிழாக்கம்: பார்க்க (PDF-3)
இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலை செய்யப்பட்டார்கள் என்று கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடத்தில் தெரிவித்ததாக அண்மையில் தெரிவித்த தூதுவர் ஸ்டீபன் ராப் இலங்கை தொடர்பில் அமெரிக்க செய்யவேண்டியது என்ன என்பது தொடர்பில் ஒரு கட்டுரையொன்றை கடந்தவாரம் எழுதியுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் மனித உரிமைகள் மற்றும் பலதரப்பு வாதங்களை வைப்பதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்ற ஜனாதிபதி பிடனுக்கு முதல் வாய்ப்பை இலங்கை வழங்கியுள்ளது என அவர் தனது கட்டுரையை நிறைவு செய்கிறார். மூலக்கட்டுரை: https://www.justsecurity.org/74803/us-can-restore-leadership-on-human-rights-by-promoting-accountability-in-sri-lanka/ தமிழாக்கம்: பார்க்க (PDF-4)
இதேவேளை பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையின் பாதுகாப்பு படையினரை சமகால மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாற்றுவதில் இலங்கைக்கு உதவுவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் இதன் மூலம் பிராந்தியத்தினதும் உலகினதும் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்ககூடிய நிலையில் இலங்கை விளங்குவதை உறுதி செய்ய அமெரிக்கா விரும்புகின்றது என்பதையும் தெரிவித்தார். இது இலங்கை தொடர்பான இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை ஆட்டுவதையே இலங்கை விடயத்தில் அமெரிக்கா ஆண்டாண்டு காலமாக செய்வதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

குருந்துமலையில் குந்திய புத்தர்
சிலவாரங்களுக்கு முன்னர் அகழ்வாராய்ச்சியின் பெயரால், குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில் காலங்காலமாக இருந்துவந்த சூலம் பிடுங்கியெறியப்பட்டு புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. இந்தக் கைங்கரியத்தை தேசிய மரபுரிமைக்கான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையேற்று நடாத்தினார். இதில் உரையாற்றிய அமைச்சர் குறித்த இடத்தில் ‘குருந்தசேவ’ என்றொரு விகாரை அமைந்திருந்ததாக 1932ம் ஆண்டு வெளிவந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. சில ஆண்டுகளுக்கு முன்னர், நீராவியடிப் பிள்ளையார் கோவில், பின்னர், கிழக்கில் ஜனாதிபதி செயலணி என நடந்தேறிய பல அத்தியாயங்களின் புதிய அத்தியாயமே, குமுளமுனையில் அரங்கேறியது. அங்கு நடந்த அகழ்வாய்வில் பெறப்பட்டவை குறித்த வாதப்பிரதிவாதங்கள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நீண்டகல் போன்ற வடிவம் அனுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப்பகுதி எனத் தேசிய மரபுரிமைக்கான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். பார்க்க (IMAGE-1)
குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திகள், நேர்காணல்கள் கருத்துக்கள் என்பன கடந்த சில வாரங்களாக சிங்களப் பத்திரிகைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இவை மரபுரிமை அமைச்சினால் வழங்கப்படும் தகவல்களே. அனேகமான சிங்கள செய்தித்தாள்களில் இச்செய்தி தொடர்ச்சியான எழுதப்படுவதன் ஊடு சிங்கள மக்கள் மத்தியில் இது தொடர்பான ஒரு வலுவான அபிப்பிராயம் கட்டியெழுப்படுகிறது. பத்திரிகைகளில் வந்த செய்திக்குறிப்பைப் பார்க்க: (PDF-5)
இதற்கிடையில் மரபுரிமை அமைச்சு குறித்த இடத்துக்கு விஜயம் செய்து அது தொடர்பான காணொளி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் மிகப்பிரபலமானதொரு காணொளி. அதைக் காண: https://www.facebook.com/vidurawickramanayakalk/videos/1593963330802839
குறித்த அகழ்வாய்வு குறித்து தமிழ்த் தொல்லியல் அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒருபுறம் தற்போது தொல்பொருள் சின்னமாக கிடைக்கப்பெற்றிருப்பது 8 பட்டைகள் கொண்ட அஷ்ட லிங்கம் எனப்படும் தாராலிங்கம் என்றவொரு கருத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் டுவிட்டர் ஊடாகப் பதிவிட்டார். காண்க IMAGE-2
இதை மறுத்து குருந்தூர்மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் இப்போது பேசப்படுவது போன்றுபல்லவர் காலத்துக்கு உரியவை அல்ல. பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை அந்தக் காலத்துக்கும் மிகவும் முற்பட்டது என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சி. பத்மநாதன் தெரிவித்துள்ளார். காண்க: (PDF-6)
இதேவேளை, பொலன்னறுவை 13 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, வன்னி பிரதேச நிலப்பரப்பு பெருமளவிற்கு தமிழர்களின் ஆதிக்கத்திற்கு பின்னர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளன. இங்குள்ள பௌத்த ஆலயம் 13 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருந்திருக்கும் என்பது வரலாற்று உண்மை. ஆயினும், பௌத்த ஆலயம் தமிழ் மக்களுக்கு உரியதா, சிங்கள மக்களுக்கு உரியதா என்பதனை ஆய்வுகளில் கிடைக்கின்ற நம்பகரமான கல்வெட்டு, நாணயங்களைக் கொண்டே உறுதிப்படுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.
வரலாற்று ரீதியாகவும் தொல்லியல்ரீதியாகவும் ஆய்வுப்புலத்திலும் களத்திலும் பாரிய சவால்களை ஈழத்தமிழர்கள் சந்திக்கிறார்கள் என்பது உறுதி.