You are here: HomeArtikelபேர்கன் நகரில் செம்மொழி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது

பேர்கன் நகரில் செம்மொழி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது

செம்மொழி விழா

கடந்த 03.06.2017 சனிக்கிழமையன்று நோர்வே பேர்கன் நகரில் செம்மொழி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரதமவிருந்தினராக திருமதி. தோவ சிறிபாலசுந்தரம் அவர்கள் வருகைதந்து மங்கல விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்க தமிழ் நாட்டிலிருந்து முனைவர் மு.இளங்கோவன் அவர்களும், ஈழத்திலிருந்து பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சிறப்புப் பேச்சாளர்களாக பங்குபற்றி உரையாற்றினர். அத்தோடு பேராசிரியர் வே.தயாளன் அவர்களும் ஒஸ்லோவிலிருந்து வருகைதந்திருந்த நோர்வே விழுதுகள் மலரின் தொகுப்பாசிரியர் உமாபாலன் அவர்களும் சிற்றுரை வழங்கினர்.

இனி நிகழ்வு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அரங்கின் நடுப்பகுதியில் கல்வித்தாய் சரசுவதி கைகளில் தொல்காப்பியம் மற்றும் ஐம்பெரும் காப்பியங்களை வைத்திருந்தார். 

நிகழ்ச்சியானது குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று தாமதமாகவே ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் விழா ஆரம்பமாகி, பேர்கன் நகரின் மூத்த உறுப்பினரும் சமூகப் பணியாளருமான திரு.பூலோகநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். பிருந்தாவன சாரங்க மாணவி பூஜா சுரேஸ்குமார் அவர்கள் அழகன் முருகனின் பாடலினைப்பாடி விழாவுக்கு இறை ஆசீரை வேண்டினார்.

சிறப்புரையாற்ற முதலில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் அழைக்கப்பட்டார். "செம்மொழி என்றால் என்ன» என்ற தலைப்பில் தமிழ் மொழியின் சிறப்பினைப் பற்றியும் தமிழ் மொழி செம்மொழியாக உயர்த்தப்பட்டமைக்கான காரணிகளையும் மிகவும் சுவையாகவும் ஆழமாகவும் பொழிந்தார்.

ஒஸ்லோவிலிருந்து வருகைதந்திருந்த நாட்டியக்கலாயோதி ஆர்த்தி உமாபாலன் அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புக்களை கூறும் பாடலொன்றுக்கு அழகிய நடனமொன்றினை ஆடி மகிழ்வித்தார்.

தொடர்ந்து பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் «செம்மொழித் தமிழ் இலக்கியம்» எனும் தலைப்பில் தமிழ் மொழியில் இலக்கியங்களின் உருவாக்கம் பற்றியும் அவை கூறிநிற்கும் பண்புகள் பற்றியும், பழங்கால இலக்கியங்களின் சிறப்புக்கள் தொடர்பாகவும் விளக்கிக்கூறினார்.

30 நிமிட இடைவேளையின் பின்னர் திரு.திருச்செல்வம் அவர்களது மாணவர்களால் புல்லாங்குழலிசை இசைக்கப்பட்டது. தமிழ் உலகில் நன்கு அறியப்பட்ட நாட்டுப்புற இசையினை புல்லாங்குழலிசையில் இனிமையாய் இசைத்தனர். அத்தோடு பிருந்தாவன சாரங்கா மாணவர்களும் சிறந்தவிரு பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.

பேர்கன் நகரில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் இரண்டிலும் தமிழ் மொழியினை அர்ப்பணிப்போடு நம் சிறார்களுக்கு கற்றுக்கொடுத்துவரும் ஆசிரியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு ஆசிரியர்களுக்கு உட்சாகத்தினைக் கொடுத்தமையினைக் காண முடிந்தது.

தொடர்ந்தது தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த முனைவர்.மு.இளங்கோவன் அவர்களது சிறப்புரை. «செம்மொழியின் எதிர்காலம்» எனும் தலைப்பில் அழகாகப்பேசி மக்களை ஈர்த்தார். அவர் தனதுரையில் தொல்காப்பியத்தின் சிறப்பினையும், திருக்குறளின் மேன்மைதனையும் சுட்டிக்காட்டி இன்றைய ஊடகங்கள் தமிழ் மொழியினைக் கொல்கிறது, மக்களை சிந்திக்க விடுவதில்லை எனவும் செம்மொழியினுடைய பழைய நிலையினைக் கூறுவதற்கு நமக்குத் துணையாக நிற்பது தொல்காப்பியம். எனவே அதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

ஒஸ்லோவிலிருந்து வருகைதந்திருந்த நோர்வே விழுதுகள் மலரினது தொகுப்பாசிரியர் உமாபாலன் நோர்வே வாழ் தமிழர்களும் தமிழும் என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையிலே பேர்கன் வாழ் தமிழர்களது சிறப்புப்பற்றிய சில முக்கிய விடயங்களை பதிவுசெய்தார்.

தொடர்ந்து பேர்கனில் வாழ்ந்துவரும் பேராசிரியர் வே.தயாளன் அவர்கள் சிற்றுரை ஆற்றினார். அவர் தனதுரையில் தமிழ் மொழி எதிர்காலத்தில் என்னவாகுமோ என தனது சமுகப்பயத்தினை மிக காத்திரமாக வெளிப்படுத்தினார்.

நன்றியுரைதனை விழா ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான ஜேசிங்கம் நிகழ்த்தினார்.

தேன்தமிழோசை வானொலிக்கலைஞர் யூலியஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக அரங்கில் நின்று அனைத்து நிகழ்வுகளையும் தரமாக தொகுத்து வழங்கினார்.

Add comment

Security code
Refresh

BT Kalender

Thu Sep 21, 2017 @ 6:15PM -
13 + To Hell - Tamilfilm på Bergenkino
Sat Oct 07, 2017 @ 9:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Dec 16, 2017 @ 4:00PM -
ஒளிவிழா 2017
Go to top