நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நில, புல உளவியற் பிரச்சனைகள் பற்றிய நூலின் வெளியீட்டு விழா.
 
ஈழத்தின் வவுனியாவில் இடம்பெற்ற நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நில, புல உளவியற் பிரச்சனைகள் பற்றிய நூலின் வெளியீட்டு விழா.
போருக்குப் பின்னரான சூழலில் தமிழ்ச்சமூகத்தில் எண்ணிலடங்கா உளவியற் பிரச்சனைகளும், அதனூடான தீதான விளைவுகளும் தொடர்கின்றன.

நிலம் தொட்டு புகலிடம் வரையான உளவியற் பிரச்சனைகளை பேசும் நோர்வே விஜேந்திரன் எழுதிய 'மெளன அலைகள்' நூலின் வெளியீட்டு விழாவானது ஈழத்தின் வவுனியாவில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்விற்கு வவுனியா புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். வவுனியா பிரதேசத்தின் பிரதேச செயலர் க.கமலதாசன் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
 
விருந்தினர் வரவேற்பு, சுடர் ஏற்றுதல், அகவணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. ஆசியுரையினை ஈழத்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளர் தமிழருவி த.சிவகுமாரன் வழங்கினார். வரவேற்புரையினை பெண் படைப்பாளி பிரபாகரன் வேதிகா வழங்கினார்.

தலைமையுரையினைத் தொடர்ந்து நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
'மெளன அலைகள்' நூலினை நிகழ்வின் பிரதம அதிதியான வவுனியா பிரதேச செயலர் க.கமலதாசன் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை 'செந்தில்நாதன் நற்பணி மன்றம்' தலைவர் செந்தில்நாதன் மயூரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றோர் நூற்பிரதி பெற்றுக்கொண்டனர்.

'மெளன அலைகள்' நூலின் விமர்சன உரையினை கலாபூசணம் 'தமிழ்மணி' மேழிக்குமரன் அவர்கள் நிகழ்த்தினார்.
பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து நன்றியுரையினை நிகழ்வினை ஒழுங்கமைப்புச் செய்த ஜனனம் நம்பிக்கை மையத்தின் நிறுவுநர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார்.
'மெளன அலைகள்' நூலின் ஆசிரியர் நோர்வே விஜேந்திரன் அவர்கள் 2015இல் 'பசுமை தேடும் பறவைகள்' கவிநூலினை வெளியீடு செய்தவர். ஈழத்தின் வவுனியா சேமமடுவினை பிறப்பிடமாகக் கொண்ட: நோர்வே விஜேந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த பின் நோர்வே தேசத்தில் வசித்து, தற்போது பிரான்ஸ் தேசத்தில் வசித்து வருகின்றார்.