மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை பல பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது வழக்கமான இந்து முஸ்லிம், தீவிரவாதம் பற்றிய கதைக்களம் தான். இதில் காவல்துறை அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார். மாநாடு படத்தில் கூட சிம்புவை முஸ்லிம் தீவிரவாதியாக மாற்றுவதற்கான வேலைதான் கதையின் கருவாக இருக்கும்.
கெமிக்கல் இன்ஜினியராக இருக்கும் விஷ்ணு விஷால் எதிர்பாராதவிதமாக தீவிரவாத கும்பலிடம் சிக்கி போலீசார் தேடப்படும் குற்றவாளியாக மாறுகிறார். இதில் விஷ்ணு விஷாலின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. எந்த குறையும் இல்லாமல் அவர் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடைய திரைப்படம் வெளியாவதால், இது நிச்சயம் அவருக்கு ஒரு கம் பேக் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது. அதில் சொல்லி கொள்ளும்படி எதுவும் இல்லை.
ஆனால் இடைவேளைக்கு பிறகு படத்தின் கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. அதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக தங்கள் வேலையை செய்திருக்கின்றனர். ஆனால் படத்தின் கதாநாயகி கேரக்டர் மட்டும் சிறிது நெருடலாக இருக்கிறது.
இந்த கதைக்கு அவர் தேவையில்லாத ஒரு கேரக்டராகவே தெரிகிறார். இது தவிர படத்தில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது. இந்த படத்தின் ஹீரோயினை விட ரைசா வில்சன் கதாபாத்திரமும் மனதில் பதியும் அளவிற்கு நடித்துள்ளார்.
மற்றபடி படத்தில் நிறைய எதிர்பாராத திருப்பங்களும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வமும் இருக்கிறது. பல சஸ்பென்ஸ் நிறைந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
ஆக மொத்தத்தில் படம் நாம் வழக்கமாக பார்த்த கதைதான் என்றாலும், விஷ்ணு விஷாலின் நடிப்புக்காக ஒரு தடவை பார்க்கலாம். மேலும் இந்தப் படத்தின் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகமில்லை.