தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டி போட்டவர் தான் இசைஞானி இளையராஜா. அதிலும் 80 காலகட்டத்தில் இவருடைய ராஜ்ஜியம் தான் தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தது. இவர் இசையமைக்காத திரைப்படங்களே அப்போது வெளிவராது.
தற்போது பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இளையராஜாவுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. அந்த வகையில் இளையராஜா முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதிலும் ராமராஜன், இளையராஜா கூட்டணியில் வெளிவரும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் வரும் செண்பகமே செண்பகமே பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருந்தது. இவ்வாறு அவர்களின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் பாடல்களுக்காகவே ஹிட்டடித்த காலமும் உண்டு.
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கதையின் நாயகனாக அவர் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து எம்எஸ் பாஸ்கர், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு தான் இளையராஜா தற்போது இசையமைக்க இருக்கிறார். கடைசியாக அவர் 1999 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த அண்ணன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு ராமராஜன் சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கவில்லை.
தற்போது இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நிச்சயம் இந்த கூட்டணி வேற லெவல் வெற்றி பெறும் என்று பட குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விஷயம் தற்போது ராமராஜன் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.