வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருந்தது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் அழுது கொண்டே திரையரங்குகளை விட்டு வெளியில் வரும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகின்றது. அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது என்று கேட்டபோது, அஜித்தை தவிர படத்தில் எதுவும் சரியில்லை என்று கூறி விட்டு செல்கின்றனர். இருந்தாலும் படம் எப்படி இருக்கிறது, என்பதை ரசிகர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்துவிட முடியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து படம் வெளியாகி இருப்பதால் அவர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம்.
வலிமை படத்தில் எத்தனையோ காட்சிகள் மிக அதிக பொருட்செலவில் மிகவும் அதிக உழைப்பை போட்டு படக் குழு அமைத்து இருக்கிறது. அந்த பாணியில் பார்க்கும்போது, படத்திற்கான உழைப்பை படக்குழு செய்து விட்டது. ஆனால், அது ரசிகர்களை சென்று சேரவில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி இந்த வலிமை படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் போன்றவற்றை தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
முதலில் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக பார்க்கப்படுவது படம் எடுக்கப்பட்ட விதம் தான் படத்தை பார்க்கும்போது நிச்சயமாக ஒரு தமிழ் படத்தை பார்க்கின்ற உணர்வு வரவே செய்யாது .அந்த அளவிற்கு ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் H.வினோத் . அதேபோல, பைக் சேசிங் செய்யும் காட்சிகள் அனைத்தும் நிச்சயமாக இதுவரை தமிழ் சினிமாவில் வந்த அத்தனை கார் சேஸிங், பைக் சேஸிங் காட்சிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிக மிக நேர்த்தியாக வினோத் அமைத்திருக்கிறார்.
இதற்காக அவர் போட்ட உழைப்பு திரையில் தெரிகிறது. இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். அப்படி முக்கியமாக பேசப்பட வேண்டிய ஒருவர் யார் என்றால் அவர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா அவர்கள்.
படத்தில் ஒரு இடத்தில் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு, படத்தின் காட்சிகளை வினோத் எப்படி காட்ட வேண்டும் நினைத்தாரோ..? அதை அப்படியே திரையில் கொண்டு வந்து,ஒவ்வொரு இடத்திலும் அவர் செய்த வேலைகள் அப்பட்டமாக தெரிந்தது. அதேபோல படத்தில் சண்டைக் காட்சிக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதற்கு காரணம் சண்டை அமைப்பாளர் திலீப் சுப்பராயனின் கைவண்ணம் தான்.
படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக படத்தில் சண்டைக்காட்சிகள் அந்தத் தரத்தில் இருக்க வேண்டும் . அதனை திலீப் சுப்பராயன் மிகத் தெளிவாக செய்து இருக்கின்றார்.. இவ்வளவு பிளஸ் உள்ள இந்த படம் ஏன் ரசிகர்களை சரியாக போய் சேரவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த படத்தின் மைனஸ் பக்கம்.
சமீப காலமாக மக்கள் அதிகமாக செண்டிமெண்ட் காட்சிகளை விரும்புவதில்லை. சமீபத்தில் ரஜினிகாந்திற்கு வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கூட சென்டிமென்ட் காட்சிகளால் தான் அந்த படம் வீணாய் போனது. அதேபோல இப்படி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை எடுத்து வைத்து விட்டு இரண்டாம் பாதியில் அம்மா சென்டிமென்ட் போட்டு அழுக வைப்பதால் படம் அங்கேயே தேங்கி விட்டது. அதேபோல இப்படிப்பட்ட திரைக்கதையை எழுதிய வினோத் கிளைமாக்ஸ் காட்சியை எந்த அளவிற்கு வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தபோது ஒட்டுமொத்தமாக அவர் செய்த சொதப்பலிலேயே மிகப்பெரிய சொதப்பல் கிளைமாக்ஸாகத்தான் இருக்கும்.
இதற்கு முன்னால் அஜித்திற்கு வந்த விவேகம் படத்தில், அந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றை பார்த்துவிட்டு அஜித் குமார் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு எடுத்து செல்ல போகிறார் என்று நினைத்த போது , அவர் தேவையில்லாத இடத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கும் , சம்பந்தமே இல்லாத சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் அழுகைகளும் அந்த படத்தை சீரழித்தது. அதே பாணியில் இந்த வலிமை படமும் தற்போது சீரழிந்து விட்டது. விவேகத்தின் இரண்டாம் பாகம்தான் வலிமை படம் என்று சொல்லும் அளவிற்கு அப்படியே விவேகம் படத்தின் சாயலில் இந்த படம் இருக்கிறது. இது இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகின்றது.