(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு 22 - 28 feb. 2021)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

ஜெனீவாவில் இலங்கை
கடந்த திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கையின் அயலுறவுத்துறை அமைச்சர் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துடன் இலங்கை அரசியல் நோக்கங்களுக்காகப் பலியிடப்படுகிறது என்றார். இன்று உலகை ஒரு நோய்த்தொற்று ஆட்கொண்டிருக்கையில் கவனம் குவிக்கவேண்டிய விடயங்கள் பல உள்ளன என்றார். முழுமையான உரை: DOC-1 தமிழில்: DOC-2.

இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை உறுப்புநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் தங்கள் நிலைப்பாடுகளை வெளியிட்டன. இதில் 27 நாடுகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தன. ஸ்கன்டிநேவிய நாடுகளின் சார்பில் நோர்வே கருத்துக்களை முன்வைத்தது. பார்க்க: Norway அதேவேளை முக்கியமான கருத்துக்களை இந்தியா(India), சீனா(China), ஜேர்மனி (Germany) ஆகியன முன்வைத்திருந்தன. இவை இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலும் ஆதரவுத்தளம் தொடர்பிலும் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கலாம். இம்முறை ஜெனீவா தொடர்பில் எழுதப்பட்ட கட்டுரை இலங்கை அரசாங்கத்தினதும் நீதி கோரிப் போராடுவோரினதும் நெருக்கடிகளை அடையாளங் காண்கிறது. பார்க்க: https://bit.ly/3r54EhH

இதேவேளை ஏனைய உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் ஜெனீவாக்கான இலங்கையின் தூதுவர் சி.ஏ. சந்திரபெருமா முன்னணியில் செயற்படுகிறார். இவர் ‘Gōta’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இலங்கைத் தூதுவர் பல குற்றங்களை இழைத்த ஒரு நபர் என்ற செய்திகள் சிங்கள ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பார்க்க: SLAMB Geneva

இந்தியா-பாகிஸ்தான்-சீனா
இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இலங்கை அயலுறவு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே சில முக்கியமான விடயங்களைச் சொல்லியிருக்கிறார். ஜெனீவாவில் தனது செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் என தாம் எதிர்பார்பதாகவும்; இந்தியாவால் இலங்கையை கைவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அயலவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை அடிப்படையாக இதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்ததை இலங்கை மற்றவர்களுக்கு எதிராக “ஒரு முகாமில் அல்லது நாட்டுடன் சேர்வதற்கு முயற்சிப்பதாக பார்க்கக்கூடாது. இது இருதரப்பு விஜயம். இந்தியப் பிரதமரையோ அல்லது வர விரும்பும் வேறு எந்தப் பிரதமரையோ வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.” என்றும் நேர்காணலில் அவர் தெரிவித்தார்;. முழுமையான நேர்காணல்: https://bit.ly/2O66aBr தமிழ் வடிவம்: The Hindu

இதேவேளை பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் முதலாவது முன்னுரிமைக்குரிய நாடு இலங்கை எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம், இலங்கை விமானப்படையின் 70வருட நிகழ்வுகளில் இந்திய விமானப்படை கலந்துகொள்வது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது. ஒருபுறம் ஜெனீவாவிலும் இன்னொருபுறம் பொருளாதாரத்திலும் இலங்கை நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கையில் இவ்விஜயம் முக்கியத்துவம் மிக்கதானது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று தொடங்கிய பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது அயல்நாட்டுத்தலைவர் இம்ரான் கான். தெற்காசியாவில் பாகிஸ்தான் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதை விரிவுபடுத்த இலங்கை விரும்புகிறது. இதேவேளை இலங்கையை பாகிஸ்தான் சீனா பொருளாதாரப் பாதையில் இணையும்படி கேட்டுக்கொண்டார். இது பற்றிய கேலிச்சித்திரமொன்றை இலங்கையில் இருந்து வெளிவரும் The Morning பத்திரிகை வெளியிட்டிருந்தது. பார்க்க: Image-01.

சீனா விரும்பினால் 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா மேலும் 99 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் என இலங்கை அயலுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி South China Morning Post பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுடனான ஒப்பந்தத்தை இலங்கை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துகிறது என்ற செய்திகள் வெளியாகிய நிலையிலேயே அமைச்சர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 6ம் திகதி Ceylon Today பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஜனாதிபதி கோட்டாபய அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்திருந்தார். இந்தத் துறைமுகத்தில் இருந்து இலங்கை எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை என கூறியிருந்த தயா ரத்னாயக்க சீன அதிகாரிகளோடு நடத்திய பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து சீனாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியிலிருந்த கடற்படைத்தளத்தையும் வேறிடத்திற்கு மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
பார்க்க: https://ceylontoday.lk/news/unclear-clauses-in-the-hambantota-port-deal-general-daya-ratnayake
பெப்ரவரி 20ம்திகதி அதே பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்த்தன “முன்னைய அரசாங்கம், 2015ம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை இரத்துச்செய்தபின் கடனைக் கட்டவழியின்றி மீண்டும் சீனாவுடன் 2017ல் ஒப்பந்தம் செய்துகொண்டபோது 99 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கியது மட்டுமன்றி அந்த தவணை முடிந்தவுடன் மேலும் 99வருடங்களுக்கு குத்தகைய புதுப்பிக்கக்கூடியவாறான சரத்தையும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளது” என்றார்.
பார்க்க: https://ceylontoday.lk/news/h-tota-port-99-year-lease-extendable
இதனிடையே அம்பாந்தோட்டை ஒப்பந்தம் மீள்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளதான செய்திகளை சீனா மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் துறைமுக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களுக்குத் தொடரும் நெருக்கடி
நீண்ட போராட்டத்தின் பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தோரை புதைப்பதற்கான அனுமதியை வழங்கும் வர்த்தமானி கடந்தவாரம் வெளியானது. இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதேவேளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் லுழரளநக யுட ழுவாயiஅநநn, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 அமர்வின் உயர்மட்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையில் முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உள்ள உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் இன்னும் கிடைக்கப்பபெறவில்லை என்பதைக் காரணங்காட்டி இன்னமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன.

இதேவேளை பொதுவெளியில் முகத்தை மூடியவகையில் உடை அணிவதைத் தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவானது பாதுகாப்புடன் தொடர்புள்ள விடயங்கள் பற்றிய பரிந்துரைகளின் விளைவாகவே முகத்தை மூடும் புர்காவை தடை செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார். பார்க்க: https://www.themorning.lk/proposal-made-to-ban-wearing-of-face-veils-in-public-justice-minister/

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை: தொடரும் சர்ச்சை
2019ம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் 1ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அதைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருந்தமை தொடர்பில் பலரும் ஜயங்களை வெளியிட்டிருந்தனர். அறிக்கையை மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்துமாறு அரசியல் கட்சிகளும் இந்நிலையில் அறிக்கையின் ஒரு பிரதி சபாநாயகருக்கு கடந்த 23ம் திகதி வழங்கப்பட்டதாக அவர் பாராளுமன்றில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இவ்வறின்கையில் உள்ள விடயங்கள் மெதுமெதுவாக வெளியாகி வருகின்றன. அறிக்கையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு உண்மைகள் மறைக்கப்படுவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றஞ் சாட்டியுள்ளார். அதேவேளை இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதையும் கோடிட்டார். குறிப்பாக அடிப்படைவாத அமைப்புகளுக்கு நோர்வே நாடு நிதியுதவி செய்ததாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. இதுகுறித்து எதுவும் அறிக்கையில் இல்லை என்றார். அவரது உரையின் காணொளியைக் காண: https://www.facebook.com/anurakumara/videos/434801887600073

இதேவேளை ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கட்சியின் செய்திக்குறிப்புத் தெரிவித்தது. ஆணைக்குவின் நிலைப்பாட்டிற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையில் வேறுபாடு உள்ளது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். பௌத்த தீவிரவாத நிலைப்பாடுகள் இத்தாக்குதலுக்கு பங்களித்தன எனவும் 2014 அல் அளுத்கமவில் ஆற்றிய உரைக்காக பொதுபல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யமுடியுமா என சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயவேண்டும் என அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஞானசார தேரர் ஆணைக்குழு தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைத்துள்ளது. பிக்குகளாகிய நாம் எமது பாரம்பரிய கடமையை ஆற்றுகிறோம். இந்த அறிக்கை பயனற்றது. பாதிக்கப்பட்ட எங்களைக் குற்றவாளிகளாகக் கண்டிருக்கிறது இவ்வறிக்கை என்றார். முழுக்காணொளியைக் காண, https://www.youtube.com/watch?v=Mi8ETFimdEY

ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆறுபேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அக்குழு எதிர்வரும் 15ம் திகதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான தனது அறிக்கையை வழங்கவுள்ளது. அதைத் தொடர்ந்தே எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பார்க்க: http://www.sundayobserver.lk/2021/02/28/news/six-member-committee-report-march-15

இதேவேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 7ஆம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாக அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து விசேட பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளும்படியும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்
எதிர்வரும் ஜுன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா நிலைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என சிறீலங்கா சுதந்திரக ;கட்சி தெரிவித்துள்ள,து புதிய அரசியல் யாப்பை முதலில் அறிமுகப்படுத்திய பின்னர் மாகாண சபைகள் தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 9 மகாண சபைகளுக்குமான காலம் நிறைவுற்றுள்ள நிலையில் அனைத்து மாகாண சபைகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்றியமைக்குத் தீர்மானித்த நிலையில் எல்லைநிர்ணய நடவடிக்கை தாமதமானதால் மாகாணசபைத் தேர்தல் தாமதமாகியது. புதிய தேர்தல் முறைமையின் கீழோ பழைய தேர்தல் முறைமையின் கீழோ தேர்தலை நடத்த வேண்டுமாயின் தற்போதுள்ள சட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும்.
பார்க்க: http://www.sundaytimes.lk/210228/news/pc-polls-by-june-434181.html