(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

ஜெனீவா: சாண் ஏற முழஞ்சறுக்கும்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு வெளியாகியுள்ளது. பார்க்க: UNHRC DRAFT

ஏற்கனவே வெளியான வரைபிலிருந்து மாற்றம் பெற்ற வரைபாக புதிய வரைபு அமைந்துள்ளது. இதில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட விடயங்களாகவே உள்ளன. ஆனால் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துவதோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சிறுபான்மையினர் அதிகளவில் ஒதுக்கப்படுவது, சிவில் சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவது, ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை பொதுமக்கள் நினைவுகூறுவதன் மீதான கட்டுப்பாடுகள், நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகள் என்பன புதிதாக இடம்பெற்றுள்ளன. இலங்கையின் மனித உரிமை ஆணையகம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியன வலுவான விதத்திலும் சுதந்திரமாகவும் செயற்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்ரகயின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதோடு எல்லாவகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் புதிய வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரைபு இறுதியானதன்று. இவ்வரைவு இன்னும் மாற்றங்களுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தை முன்வைத்துள்ள நாடுகளும் இலங்கையும் தமக்குரிய ஆதரவைத் திரட்டும் வேலைகளில் இறங்கியுள்ளன. கொழும்பில் உள்ள பிரித்தானிய மற்றும் கனடியத் தூதரக அதிகாரிகள் கொரிய, பாகிஸ்தான் தூதரக அலுவலர்களைச் சந்தித்து ஆதரவு கோரியதாக மௌபிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் உரை குறித்த விவாதத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து வெளியிட்டிருந்தாலும் வாக்கெடுப்பு என வரும்போது நிலைமை வேறுவிதமாக காணப்படலாம் என இலங்கையின் அயலுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேற்குலகநாடுகள் மூன்றாமுலக நாடுகளை அச்சமூட்டிப் பணியவைக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ் சாட்டினார்.

இலங்கையை முன்வைத்து ஜெனீவாவில் நடப்பன மனித உரிமைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அவை பல அந்நிய நலன்களின் பாற்பட்டது. அதை அலசும் ஒரு கட்டுரை - குறிப்பாக இந்தியாவின் வகிபாகத்தை - படிக்க: https://bit.ly/3bpFAMJ


நீதியைக் கோரும் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் மகள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க “எனது தந்தை 12 வருடங்களிற்கு முன்னர் கொலை செய்யப்பட்டார், இலங்கையின் ஆட்சியாளர்கள் இன்னமும் எங்களிற்குநீதியை மறுக்கின்றனர்” என்று தலைப்பிட்டு கட்டுரையொன்றை வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதியுள்ளார். இலங்கையின் மனிதஉரிமைச் சவால்களை மையப்படுத்தியும் தனக்கு நீதி கிடைக்காமையை நோக்கியுமான ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். தமிழில்: WP-Tamil

இதைத்தொடர்ந்து அமெரிக்கக் காங்கிரஸின் அயலுறவுக் கொள்கைகளுக்கான குழு “இலங்கையில் நீதியை நிலைநாட்ட அமெரிக்கா வினைத்திறனுடன் செயலாற்ற வேண்டும்” எனக் கோரியது. தொடர்புடைய டுவீட்: Tweet

குறித்த கட்டுரையின் உள்ளடக்கதை முழுமையான மறுதலித்த இலங்கையின் அயலுறவுச் செயலாளர், இவை “இலங்கை;கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல்” என்றார். அவரைப் போலவே இன்னும் பலரும் இலங்கையின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்றார்.


உலகின் முதல் வைரஸ் தடுப்பு முகக்கவசங்கள் இலங்கையில்
கொவிட்-19 வைரஸ்களைக் கொல்லக்கூடிய முகக்கவசங்களை பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. பேராசிரியர் காமினி இராஜபக்ச தலைமையிலான குழுவே இக்கண்டுபிடிப்பை நிகழ்;த்தியுள்ளது. மூன்று அடுக்ககளைக் கொண்ட இந்த முகக்கவசம் நனோதொழிநுட்பத்தின் உதவியுடன் வைரஸ் கிருமிகளைக் கொல்லும் சக்தி படைத்தது. இப்போது பாவனையில் உள்ள முN 95 முகக்கவசங்களை விட இப்புதிய முகக்கவசங்கள் பாதுகாப்பானவை எனப் பேராசிரியர் காமினி இராஜபக்ச தெரிவித்தார். இந்த முகக்கவசங்கள் விரைவில் இலங்கையில் சந்தைக்கு வருவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார். பேராசிரியர் காமினி இராஸபக்ச பேர்கனில் உள்ள மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திக்குறிப்பு: https://southasiamonitor.org/index.php/sri-lanka/sri-lankan-scientists-develop-face-mask-kills-covid-19-virus


இலங்கையில் பாஜக
இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் இந்த கட்சியை ஆரம்பிப்பதாக இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வேலுச்சாமி முத்துசாமி தெரிவித்தார். அதேவேளை இக்கட்சிக்கு இந்திய பாஜகவும் எதுவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால் ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்விக்கு பதிலளித்த கட்சியின் செயலாளர் எம். இந்திரஜித் தாங்கள் இப்பெயரில் கட்சி ஒன்று ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய பாஜகவிற்கு எதுவித் ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார். இது தொடர்பான காணொளி: https://www.youtube.com/watch?v=5DqwmIHNYvg

இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு நடத்தி வரும் மறவன்புலவு சச்சிதானந்தன். கடந்த மாதம் 17ம் திகதி ஒன் இந்தியா தமிழ் இணையத்தளத்திற்கு அளித்த நேர்காணலில் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கும் திட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பார்க்க: https://bit.ly/38iVzdK

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்சிகள் வருவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரிலான கட்சியின் ஊடாகவே, இலங்கையில் இணைந்து வடகிழக்கில் தமிழ் மக்களின் இறைமை ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருந்தால், அந்த கட்சியை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
கடந்தமாதம் திரிபுரா மாநில முதலமைச்சர் “பாஜகவை இந்தியாவில் மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் விரிவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக இலங்கை மற்றும் நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும்” என்று கூறியிருந்தார்.

உணவு வீணடிப்பில் யாழ்ப்பாணம் முதலிடம்
ஜக்கிய நாடுகள் சுற்றூடல் நிகழ்ச்சித் திட்டமானது (United Nations Environment Programme) கடந்தவாரம் உணவு வீணடிப்புச் சுட்டெண் 2021 அறிக்கையை (Food Waste Index Report 2021) வெளியிட்டிருந்தது. அதன் பிரகாரம் இலங்கையின் பிரதான நகரங்களில் உணவு வீணடிப்பு பற்றிச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அதிகமாக உணவு வீணடிப்புச் செய்யும் மாவட்டமாக யாழ்ப்பாணமும் மிகக்குறைவாக உணவை வீணடிக்கும் மாவட்டமாக திருகோணமலையும் பட்டியலிடப்பட்டிருந்தன. பார்க்க: Jaffna

இவ்வறிக்கையின்படி இலங்கையர் ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு 76கிலோ உணவை வீணடிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. முழுமையான அறிக்கை: UNEP Report

இதேவேளை இந்த அறிக்கை இலங்கை தொடர்பிலான தரவுகளுக்கு ஜப்பான் அபிவிருத்தி நிறுவனத்தின் அறிக்கையொன்றையே மையப்படுத்தியிருந்தது. அவ்வறிக்கை யாழ்ப்பாணத்தின் கழிவகற்றல் சவால்களையும் நெருக்கடிகளையும் குறித்த மிகப்பயனுள்ள சித்திரத்தைத் தருகிறது. பார்க்க: https://openjicareport.jica.go.jp/pdf/12250213.pdf