கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

ஜெனீவாவில் இலங்கை: பொம்மலாட்டம்
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான பிரேரணையின் இறுதிநகல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இதை பிரித்தானியாவையைத் தலைமையாகக் கொண்ட மையக்குழு தயாரித்துள்ளது. பிரேரணை: UNHRC

இது தொடர்பிலான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ம் அல்லது 23ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தீர்மானம் இலங்கையின் இறைiமையில் தலையிடுகின்றது என தெரிவித்துள்ள இலங்கையின் அயலுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளிற்கு பிரிட்டன் தலைமைதாங்குவது நட்பற்ற செயல் என குறிப்பிட்டுள்ளார். இறுதி நகலின் உள்ளடக்கம் ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். பொதுநலவாயத்தின் அங்கத்துவ நாடு என்ற வகையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தீர்மானத்தைக் கொண்டுவருவது நட்பற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கின்றது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

“ஜெனீவாவில் இலங்கையின் நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன” என்று தலைப்பிட்டு நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இணைப்பு: https://www.nytimes.com/2021/02/24/world/asia/sri-lanka-missing-UN.html தமிழில்: Newyork Times

இதேவேளை இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையில் மனித உரிமைகள் பேரவை தொடர்பிலும் அதில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள 8 மாயைகளை சர்வதேச மன்னிப்புச்சபை பட்டியலிட்டுள்ளது. வாசிக்க: https://www.amnesty.org/en/latest/news/2021/03/eight-myths-about-sri-lanka-at-the-un-human-rights-council/

இறுதிநகல் மாகாணசபைகள் தடையின்றி சுதந்திரமாக இயங்குவதையும் அதை சாத்தியமாக்க 13வது யாப்புத்திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலையும் கோருகிறது. இம்மாற்றங்கள் இந்தியாவின் வேண்டுகோளின்படி தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறியக்கிடைக்கிறது. இதன் பின்னணியில் இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகத் தெரியவருகிறது. பார்க்க: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1704621

'இந்தியா டுடே” ஊடக நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்ற இந்திய அயலுறவுத்துறை அமைச்சர்; எஸ். ஜெய்சங்கர் இலங்கைத் தமிழ் மக்கள் மீது காண்பிக்கப்படும் கரிசனை என்பது தேர்தல்காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி உண்மையானதாக அமையவேண்டும் என்றார். மேலும் “தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது தேர்தல்தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆரம்பித்து தேர்தலுக்கு மறுதினம் முடிவடைகின்ற ஒருவிடயமாக இருக்கக்கூடாது சில வேளைகளில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரிக்கும். பின்னர் அது தணிந்துபோகும். இது தவறான போக்காகும்” என்றார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ்கட்சிகளும் பங்கேற்றன. இது தொடர்பான செய்தியை இந்திய தூதுவராலயத்தின் டுவிட்டர் பக்கம் வெளியிட்டது. Tweet-1
இதைத்தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம்செய்து சீனன்குடாவில் இந்தியாவசம் உள்ள எண்ணெய்கிணறுகளைப் பார்வையிட்டார். பார்க்க: Tweet-IOC
நீதிமன்றால் நிறுத்தப்பட்ட இந்தியாவால் நிர்மாணிக்கப்படவிருந்த நிலக்கரி ஆலைக்கு பதிலாக சூரியகல வளாகமொன்றை உருவாக்க இந்தியா முனைகின்றது. இது தொடர்பில் குறித்த இடத்திற்கும் அவர் வருகை தந்தார். பார்க்க: Tweet-Sampur

இந்நகர்வுகள் ஜெனீவாவைக் காட்டி இலங்கையைப் பணியவைக்கும் நகர்வுகள் என்பதில் ஜயமில்லை. இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் வந்த கேலிச்சித்திரங்கள் இரண்டு: Cartoon-1, Cartoon-2


அரசாங்கத்துக்குள் அதிருப்தி
அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்த அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைச்சரின் அறிக்கைகள் சில அரசாங்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அமைச்சர் விமல்வீரவன்சவின் அறிக்கைகள் கட்சிக்குள் பிளவுஏற்பட்;டுள்ளது என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த அமைச்சர் விமல்வீரவன்சவின் உரைகளை காண்பித்துள்ள அவர் பசில்ராஜபக்சவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் அமைச்சர் விமல்வீரவன்சவின் நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்சீவ எதிரிமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல்களை உருவாக்குவதற்கு பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் அந்த குடும்பத்தை அரசியல் மூலம் பிரிக்க முடியாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆசியா முழுவதிலுமே மிகச்சிறந்த தலைவர் மகிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ள ஜனாதிபதி அவரது அரசியல் பரிச்சயம் முதிர்ச்சி அறிவு தலைமைத்துவம் போன்றறை எவருடனும் ஒப்பிடமுடியாதவை என நான் கருதுகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் கட்சிக்கு தலைமை தாங்கும்போது நான் நாட்டிற்கு தலைமை தாங்குவது எனக்கு பெரும் ஆறுதலாகயிருககும் என நான் கருதுகின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எங்களது வெற்றிக்கான பயணத்தில் முக்கிய காரணி மகிந்த ராஜபக்சவே என அவர் தெரிவித்துள்ளார். கட்சியொன்றை உருவாக்கி வெற்றியொன்றை சாத்தியமாக்கியவர் பசில் ராஜபக்சவே என்பதை எந்த வித விவாதங்களுமின்றி நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த தலைவர்களுடன் அரசாங்கமொன்றை தொடர்வதே எனக்கு சாதகமான விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துவரும் நிலையில் இதற்கு தீர்வை காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலையிட வேண்டும் என பௌத்;த மதகுரு முருத்தெட்டுவேவ ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாரஹென்பிட்டிய அபயராம விகாரையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் செய்யாதது எதுவுமில்லை, நாட்டுக்கு அரசாங்கம் சேவையாற்றும் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்பட்டது ஆனால் தற்போது நாங்கள் பதிலளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. வைத்தியர் அமால் சில்வா உடனடியாக வேறு இடத்திற்கு இடமர்ற்றம் செய்யப்பட்டுள்ளார், அவர் விலங்குகள் உணவு தயாரிக்கும் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். வைத்தியர் அனில் ஜயசிங்க புற்களை வெட்டும் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் வேறு பலர் இடமாற்றப்படவுள்ளனர். இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதற்கா பௌத்த மதகுருமார்ர்கள் தலையிட்டனர் என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்;. பிரதமருக்கு இந்த பிரச்சினை குறித்து தெரிவித்தால் அவர் தலையிடுகின்றார் இல்லை. இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்களும் மக்களுடன் சேர்ந்து வீதியில் இறங்கவேண்டிய நிலையேற்படும் என நான் நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ராஜபக்ச அவர்களே ஜனாதிபதி உங்கள் சகோதரர் அவர் ஜனாதிபதி பதவியை பார்க்கட்டும், நீங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இல்லாவிடில் இந்த அரசாங்கம் இப்படியே தொடரமுடியாது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கின்றது, அதிருப்தியடையாத ஒருவரை காண்பியுங்கள் என நாங்கள் இந்த அரசாங்கத்திடம் துணிந்து கேட்கிறோம், ஏனென்றால் அனைவரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்றார்.

அண்மையில் வெளியான இலங்கையின் தற்போதைய நிலையை புலப்படுத்தும் கேலிச்சித்திரம்: Cartoon-3

தீவிரவாதத்தின் முடிவு என்று தலைப்பிட்டு ~ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக சிங்கள பௌத்தம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டுவரும் தீவிரவாத வேலைதிட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது” எனக் குறிக்கிறார் ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் முழுக்கட்டுரையைப் படிக்க: http://www.ft.lk/columns/The-end-of-an-era-of-extremism/4-713865 தமிழில்: Victror Ivan


இலங்கை திரும்புவோருக்கு புதிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரண்டு கட்டங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அவர்களை தனிமைப்படுத்துவது போதுமானதென, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. புதிய சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர், சகல தகவல்களையும் சமர்ப்பித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும் என்றும், நாட்டுக்கு வருவதற்கு முன்னர் 96 மணித்தியாலங்களில் மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் கொவிட் தொற்று இல்லை என்பதற்கான உறுதிச் சான்று மற்றும் நாட்டை வந்தடைந்து 48 மணிநேரத்துக்குள்ள மீண்டும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.