கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

ஜெனீவா: நாடகத்தின் முடிவு
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை எதிர்வரும் 23ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா,வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. 47 உறுப்பு நாடுகளை கொண்ட ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில் தனது நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை முயன்று வருகிறது. குறிப்பாக தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன. இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியா தமது நிலைப்பாட்டை அறிவிக்காத போதிலும், வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் என நம்பப்படுகிறது. இலங்கையை கையாள எவ்வாறு இந்தியா தடுமாறுகிறது என்தை விளக்கும் கட்டுரையொன்று அண்மையில் வெளியாகியிருந்தது. பார்க்க: India

இதேவேளை சர்வதேச அழுத்தத்திலிருந்து படையினரை பாதுகாப்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகள் புதிய அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல உலகநாடுகள் தங்கள் படையினரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த நாடுகளின் சட்டங்களின்படி படையினரை அவர்களின் நடவடிக்கைகளிற்காக தண்டிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாணத்துக்கான முன்னாள் ஆளுனரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேன் இராகவன் ஜெனீவாவை நாடாமல் தேரர்களுடன் பேசினால் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கலாம் என அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். பார்க்க: Geneva

ஜெனீவா உணர்த்துகின்ற வலுவான செய்தி யாதெனில் இது தமிழ் மக்களின் விடிவிற்கானதல்ல. பூகோள அரசியல் சதுரங்கத்தில் இலங்கையின் வகிபாகம் தவிர்க்கவியலாதாது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆசியாவை முன்னிலைப்படுத்தல் திட்டத்தில் இலங்கை முக்கிய இடம் வகிக்கிறது. இது தொடர்பான விரிவான பார்வைக்குக் காண்க: https://bit.ly/3r9jrXB


குறிவைக்கப்படும் சிறுபான்மையினர்
நிக்காப், புர்கா இரண்டு உள்ளடங்கலாக முகத்தை மறைக்கும் அடையாளங்களை அணிவதை தடை செய்வதற்கான அனுமதிக்கான, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை, நேரடியாக புர்கா பாதிப்பதாகவும் மதத் தீவிரவாதத்தின் அடையாளமொன்றாக புர்கா இருக்கின்றது எனவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பதிவு செய்யப்படாத 1,000க்கும் மேற்பட்ட மதராஸாக்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் எடுப்போமென வீரசேகர இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசெப் அல் ஓதெமைனை தொலைபேசியில் தொடர்புகொண்டார் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை ஜெனீவாவில் பல இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை வேண்டிநிற்கின்ற நிலையில் இத்தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பாகச் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி, பொலிஸ் அதிகாரியல்லாத எவரேனும் ஒருவரிடம் சரணடையும் ஒருவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் 24 மணித்தியாலங்களுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். விசாரணை நடத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்பதைப் பரிசீலிப்பதற்காக, அந்தப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் குற்றமிழைத்துள்ளமை உறுதியாகுமாயின், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபரிடம் அந்நபரை முன்னிலைப்படுத்த வேண்டும். குற்றத்தின் தன்மைக்கு அமைவாக, அந்த நபருக்கு எதிராக வழக்குத் தொடராமல் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு தகுதியுடையவர் என்பது சட்டமா அதிபரின் நிலைப்பாடாக இருக்கலாம். என்றாலும் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அந்த நபருக்கு எதிராக முன்வைக்கப்படும் காரணங்களை ஆராய்ந்து, ஒரு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு புனர்வாழ்வளிக்க உத்தரவிட முடியும். புனர்வாழ்வளிக்கப்படும் காலம் முடிந்த பின்பு, அதன் பெறுபேற்றைப் பரிசீலித்து விடுதலை செய்யவோ, மேலதிகமாக புனர்வாழ்வளிக்கவோ, பரிசீலித்துப் பார்க்கவோ வேண்டும் என்பதோடு, அதற்காகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நீடிக்கப்படும் புனர்வாழ்வு கால எல்லையின் முடிவில், குறித்த நபர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காண்க: வர்த்தமானி

இதேவேளை மத இன சமூக ஐக்கிய ஓற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் தடுத்துவைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முழு அறிக்கையைக் காண: தமிழில் HRW
ஆங்கிலத்தில் https://www.hrw.org/news/2021/03/16/sri-lanka-religious-disharmony-order-threatens-minorities

இலங்கையில் இயங்கிய குழந்தைப் பண்ணைகள்
போர்க்காலத்தில் இலங்கையில் குழந்தைப் பண்ணைகள் இயங்கியதாகவும் அவை குழந்தைச் சந்தைகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டதாகவும் பி.பி.சி செய்திச்சேவை கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு, நெதர்லாந்தில் பேசிய அப்போதைய இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர், 1980களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் பொய்யாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 11,000குழந்தைகள் வரை ஐரோப்பிய குடும்பங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,000 குழந்தைகள் நெதர்லாந்தில் தத்து கொடுக்க்கப்பட்டிருக்கின்றன. மற்ற குழந்தைகள் ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில் சில குழந்தைகள், 'குழந்தைப்பண்ணையில்' பிறந்து, மேற்கில் விற்கப்பட்டுள்ளது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன - இதனைத்தொடர்ந்தே, 1987ஆம் ஆண்டு, இலங்கை அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்துகொடுப்பதற்கு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. முழுச் செய்திக் குறிப்பைக் காண: https://www.bbc.com/news/world-56390772