கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

ஜெனீவா தீர்மானம்: எதிர்வினைகளும் எதிர்காலமும்
இலங்கை குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் கடந்த செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்துக் கருத்துத் தெரிவித்த இலங்கையின் அயலுறவு அமைச்சர் டினேஷ் குணவர்த்தன: “47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அந்தவகையில் 11 நாடுகள் பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்துள்ளன.அத்துடன் மேற்படி வாக்களிப்பில் 14 நாடுகள் கலந்து கொள்ளாத நிலையில் 25 நாடுகள் மேற்படி பிரேரணை தொடரபில் எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைத்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.” என்று தெரிவித்ததுடன் இது தமக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அவரது டுவிட்: Tweet SLFM

இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவார்ட் கப்ரால் வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு தெரிவித்தார்: “ஐநா மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளில் இலங்கை மீதான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த 11 நாடுகளது சனத்தொகையானது ஒட்டுமொத்த மனித உரிமைப்பேரவையின் சனத்தொகையில் 43 சதவீதத்தைக் கொண்டுள்ளன. வாக்களிக்காத 14 நாடுகளதும் சனத்தொகை 39 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மாறாக பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த 22 நாடுகளதும் சனத்தொகை வெறுமனே 18 வீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. அதன்படி பிரேரணைக்கு ஆதரவளிக்காத 25 நாடுகளதும் சனத்தொகை 82 சதவீதமாகும். அவர்களுக்கு நன்றி”. அவரது டுவிட்: Tweet Cabraal

இவ்விரு கருத்துக்களும் மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளாகின. அதேவேளை கடந்த 12 ஆண்டுகளில் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்க்க: Voting SL

இத்தீர்மானம் இலஙகையின் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை என இலங்கையின் ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் குறிப்பாக முக்கிய ஆட்சியாளர்கள் தற்போது செல்லும் பாதையில் இருந்து பின்நோக்கிய நகராவிட்டால் இதனைவிடவும் கடுமையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். ஜெனிவா தீர்மானத்தை புறந்தள்ளி இராணுவத்தினரை முக்கிய பதவிகளுக்கு நியமித்து நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரை அதிகமதிகமாக ஈடுபடுத்தி இந்த அரசாங்கம் முன்நகருமாக இருந்தால் மிகக்கடுமையான விளைவுகளை 2022 ஆண்டு செப்டம்பர் மாத அமர்வின் போது சந்திக்க நேரிடும் என அவர் மேலும் கூறினார்.

இந்துசமுத்திரத்தின் வலிமைமிக்க நாடுகளின் பூகோள அரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தான் தயாராகவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரiவையின் சவால்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தயார் முக்கிய சர்வதேசநாடுகளிற்கு இடையிலான மோதல்களின் ஒரு பகுதியாக விளங்குவதற்கு தான் தயாரில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பையும் இறைமையையும் எப்போதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இம்முறை ஜெனீவாவில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் எவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள முஸ்லீம் சமூகத்திற்கு ஆறுதலாக இருந்தது என்பதை விளக்கும் ஒரு பயனுள்ள கட்டுரை வெளியாகியிருந்தது. வாசிக்க: Geneva Muslims

இதேவேளை 'ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் இலங்கை குறித்த மையக்குழுவும் இந்தியாவும் தமிழ் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் கடந்த 35 வருடங்களாக நிராகரித்தவந்துள்ள ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதில் முனைப்புக் காட்டுகின்றன" எனறு தமிழ் சிவில் சமூக அமையம் குற்றஞ் சாட்டியிருக்கிறது. முழு அறிக்கை: Tamil Civil Society

ஜெனீவாவுக்கு பின்னர் அடுத்த என்ன, தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகள் எவை, இலங்கையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் யாது என்பதை ஆராயும் ஒரு கட்டுரை கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது. வாசிக்க: https://bit.ly/39iTvCL


புலப்பெயர்வு குறித்த கரிசனைகள்
ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் முக்கியம் இடம்பெற்றதொரு செய்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வருமா இல்லையா என்பது. சுவிஸ் நாட்டைப் பொறுத்த வரை தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்களைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது நிறுத்தப்படமாட்டாது எனத் தகவல் வெளியாகி உள்ளதெனவும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் மார்ச் 30 ம்திகதி இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அμசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதற்பக்கச் செய்திகளாக வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம், நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் ஆகிய செய்திகளைத் தாங்கிய முழுப்பக்க விளம்பரங்களை புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனம் பிரசுரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மாகாண சபைத் தேர்தல்கள்
மாகாண சபைகளை அமைத்து அதன் மூலம் உள்ளுராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானம் கோரும் அதே வேளை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியாவும் வலியுறுத்துகின்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை கோரியுள்ளது. எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க அதிக நேரம் கோரியதைத் தொடர்ந்து, உத்தேச சட்டத்துக்கான அமைச்சரவை அனுமதி ஒத்தி வைக்கப்பட்டது. ஆகவே, சட்டரீதியான தடைகளைத் தீர்த்த பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை (29) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலேயே தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கைமய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமக்கைமய தேர்தைல நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைக்கமைய தேர்தைல நடத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. கடந்த அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தல் சட்டத்தில் திருத்தம் வடிவில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறித்த பரிந்துரையின்படி, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் 50 சதவீத உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கலப்பு முறையின் கீழும் மீதமுள்ளவை கடந்த முறையின் கீழும் இடம்பெறும். இருப்பினும், எல்லை நிர்ணயச் செயல் முறை ஒரு சட்ட பூர்வமான சிக்கலை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போதைய சட்டத்தின் அடிப்படை யில் வாக்கெடுப்பை நடத்து வது சாத்தியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் குறித்த விடயத்தை திருத்துவதற்கும் புதிய சட்டத்தை கொண்டுவரவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் இரண்டு வழிமுறைகளைபக் கொண்ட ஒரு புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், 70சதவீத உறுப்பினர்கள் கடந்த கால தேர்தல் முறையின் கீழும் தபால் மூல வாக்களிப்பு உட்பட மிகுதி நடவடிக்கையை விகிதாசார முறைப்படியும் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இத்தாமதத்தின் பின்ன சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் 13 ஆவது திருத்தம் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்து வருகின்றமை செல்வாக்குச் செலுத்துகிறது. “நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எஞ்சியுள்ள ஒரே வழி மாகாணசபை முறை மையாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசு நடத்தவேகூடாது.” என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அவர் “நாட்டைப் நோக்கிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியாவும், மேற்குலகமும் ஜெனிவாத் தொடரில் வலியுறுத்திவருகின்றன. மேற்படி அழுத்தங்களுக்கு அரசு அடிபணியக்கூடாது. மாறாக இந்தியாவையும், மேற்குலகையும் திருப்திப்படுத்துவதற்காக தேர்தல் நடத்தப்படுமானால் பாரிய விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும். தற்போதைய மாகாணசபை முறைமை என்பது நிர்வாக ரீதியில் வெள்ளை யானையாகும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு எஞ்சியுள்ள வழியாகவும் அது அமைந்துள்ளது. எனவே, அத்தகைய முறைமைக்கு அரசு உயிர்கொடுக்க முற்படக்கூடாது என எச்சத்தார். இதுவே இன்று சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகளின் நிலைப்பாடக உள்ளது. பலர் அரசாங்கம் உடனடியாக புதிய அரசியல் யாப்பை கொண்டுவரக் கோருகின்றனர். அதன்மூலம் மாகாண சபை முறையை இல்லாதொழிக்கவும் சிலர் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புதிய அரசியலமைப்பு நோக்கிய நகர்வுகள்
சர்வதேச தண்டனை விலக்கீட்டை வகுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இராணுவ அதிகாரிகளை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ அதிகாரிகளை நாட்டிற்கு வெளியே உள்ள நிறுவனங்களால் வழக்குத் தொடர முடியாது என்பதை உறுதிப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவை ஏற்படுத்தப்படுள்ள புதிய அரசியலமைப்பின் பகுதியாகவும் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை புதிய அரசமைப்பில் பௌத்தத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது. புதிய அரசமைப்பு வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் கட்சியின் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.


கொவிட் தொற்றும் தடுப்பூசியும்
கொவிஷீல்ட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள பின்னணியில், இலங்கையில் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் தோல்வியடையும் நிலைகுறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. முதலாவது கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு, இரண்டாம் தடுப்பூசி உரிய முறையில் செலுத்தப்பட முடியாவிட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தோல்வியடையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “இன்னும், முதலாவது தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படவில்லை. இந்த நிலையில், இரண்டாம் தடுப்பூசித் தொகையை பெற்றுக்கொள்வது தொடர்பில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உடன்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது, தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். முதலாவது கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டாவது தடுப்பூசியை செலுத்தவேண்டும். இல்லாவிட்டால், நாட்டின் நிதியை செலவு செய்து மேற்கொள்ளும் நடவடிக்கை முழுமையாக தோல்வியடையும்” என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியமையால் யாழ்ப்பாணம் முடக்க நிலைக்குச் சென்றுள்ளது. யாழ் வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் சனிக்கிழமை 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளானோரில், திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் வர்த்தகர்கள் அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக செய்தியறிக்கையொன்று தெரிவிக்கின்றது. பார்க்க: Jaffna Traders

இந்தவாரக் கேலிச்சித்திரங்கள்: Cartoon1, 2, 3, 4