கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

புலம்பெயர் அமைப்புக்கள், நபர்கள் மீது தடை
இலங்கை அரசாங்கம் 7 தமிழ் அமைப்புக்களையும் முஸ்லிம்கள், தமிழர்கள் உட்பட 300ற்கும் அதிகமான தனிநபர்களையும்; கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 25ம் நாளான்று திகதியிடப்பட்ட இலங்கை ஜனநாயகக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம் பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் நவம்பர் மாதம் 9ந் திகதிய 1992/25 அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின் நிரல் இதற்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவாறு இத்தால் திருத்தப்படுகின்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த அதிவிசேட வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ள போதும் இதுபற்றிய தகவல்கள் கடந்தவாரமே வெளியாகின. ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியதன் பின்னணியில் பிற்தேதியிடப்பட்ட முறையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது என்றே கருதப்படுகிறது. பார்க்க: 2021-English, 2021-தமிழ்

2014ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப்புலிகளுடன ;தொடர்பு வைத்திருந்தமை மற்றும் நிதி உதவி வழங்கியமை போன்ற காரணங்களின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நபகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் 2014 மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. பார்க்க: 2014-English, 2014-தமிழ்

2015ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க - மைத்திரிபால சிரிசேனா தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து இலங்கையில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 08 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 269 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. பார்க்க: 2015-removed list

இச்செயலை அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை என அரசாங்கத்தின் நடவடிக்கையை வர்ணித்துள்ள சர்வதேச நெருக்கடிக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கினன் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக வினைத்திறனுடன் செயற்படுகின்ற பெரும் எண்ணிக்கையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை கறுப்புப்பட்டியில் இணைத்துள்ளது. இதன்காரணமாக இலங்கையில் இருந்து இந்த அமைப்புக்களோடு மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருப்பர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது tweet

தடைவிதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர்கள் ஆகியவர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள், கடந்த காலத்தில் பேணியோர் என்று அவர்களுக்கு எதிரான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தமிழ் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவரது பேஸ்புக் பக்கத்தில் தடைசெய்யப்பட்ட நபர் இவரது நட்புப் பட்டியலில் இருந்தார் என்பதற்காக, கொழும்புக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தொடக்கம் என்றே கொள்ள முடியும்.

இலங்கையில் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவம் புலனாய்வு தகவல்களை சேகரிப்பதுடன் இது தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸாரும் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் தனியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.


ஜெனீவாவுக்குப் பிறகு
இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருந்தால் தான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனவே, சாட்சியங்கள் போதாமல் இருக்கின்ற போது, எமது எதிர்பார்ப்புக்கு விரும்பத்தகாத பதிலே வந்துசேரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “நாங்கள் சர்வதேசத்திடமே இன்று நீதிகோரி நிற்கிறோம். சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கிறோம். இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளைத் தெரிவித்த தாக நான் அறியவில்லை. இரு தரப்பினரும் போர்க்குற்றம் செய்தார்கள் என்று
நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இனவழிப்பு என்பதை நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இதேவேளை, நாங்கள் சொல்வதையே அங்கிருந்து சொல்ல வேண்டும் என்பதை யாரும் சர்வதேசத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அனைத்துப் பக்கங்களையும் விசாரணைசெய்து சரியான தீர்மானங்களையே அவர்கள் எடுப்பார்கள். அத்துடன், மனித உரிமை பேரவையினால் இலங்கையினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது. அதற்கான அதிகாரம் மனித உரிமைப் பேரவைக்கு இல்லை. நாங்கள் போராட்டங்களை நடத்தி, சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி, உண்ணாவிர தப் போராட்டத்தில் பத்துப் பேர் உயிரிழந்திருந்தாலும்கூட மனித உரிமைப் பேரவையினால் அதனைச் செய்யமுடியாது” என்றார்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் வெளிநாடுகள் வழக்குத் தாக்கல் செய்யுமா? என்ற வினாவுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை சில முக்கிய விடயங்களைப் பேசுகிறது. காண்க: https://bit.ly/3usBfiN

“இறுதிப் போரில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களைக் கண்டறியவும், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதை சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் செயற்பாடாகக் கருதாது எமது பிரஜைகள் மீதான அக்கறையில் உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் “போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் 2009ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது. அத்தோடு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா?, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போன்ற உண்மைகளைக் கண்டறியும் ஆணைக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொது ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் எனவும், சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு சகல மக்களுக்கு மான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீண்டகாலமாக நாம் கோரி வருகின்றோம். தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என நம்ப முடியாது. அதேபோல் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறிவிட முடியாது. ஒரு சிலர் அல்லது அரசு செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் உள்ளது” என்றார்.

ஜேர்மனி சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கபட்டு நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட 24பேர் கடந்தவாரம் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்தனர். ஜேர்மனியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 20பேரும் சுவிட்சர்லாந்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நால்வரும் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அழைத்துச்செல்லுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் அதன் பின்னர் அவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அரசாங்கத்துக்குள் குத்துவெட்டு
விமல் வீரவன்சவின் அரசியல் ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் சாந்த பண்டார அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்க மட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஒரு சதிகாரன். தற்போது ஜெனீவாவில் எமக்குக் கிடைத்த தோல்விகளை விட பாரிய தோல்வியே நாட்டுக்கு கிடைக்க வேண்டும் என விரும்பியவர்தான் கொலம்பகே. இவர் வெளிவிவகார அமைச்சர் தினேஷையும் மிஞ்சி செயலாற்ற விரும்பினார். அதே போன்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஒரு அப்பட்டமான சி.ஐ.ஏ உளவாளியும் அமெரிக்கப் பிரசையும் ஆவார். இவர்களே இலங்கைக்குப் பேரழிவைத் தேடித் தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 6.9 மில்லியன் மக்களின் ஆணையை மீறிவிட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயகம்மன்பில அரசாங்கத்திற்குள் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிலர் அரசாங்கத்திற்குள் உள்மோதல் காணப்படுகி;ன்றதா என கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் அரசாங்கத்திற்குள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை என குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டம் அரசாங்கத்தை அழிப்பதற்கானது இல்லை அதனை பாதுகாப்பதற்கானது. 20வது திருத்தம் மக்களின் ஆணையை மீறுவதாக காணப்படுகின்றது. நாங்கள் மக்களின் ஆணையை பின்பற்றியிருந்தால் 20வது திருத்தம் சாத்தியமாகியிராது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அரசின் 11 பங்காளிக் காட்சிகள் ஒன்றிணைத்து தனித்து மே தின நிகழ்வை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற குறித்த 11 கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளத்தைக் காப்பதற்கான போராட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடாத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில் அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை இது கோடு காட்டியது. வவுனியாக் குளத்தில் மண்போட்டு நிரவப்பட்டு, பொழுது போக்குப் பூங்காவாக அமைப்பதற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தினை நீர்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து, வவுனியா நகரசபையின் அனுமதியுடன், பூங்கா அமைத்துள்ளது. தற்போது மேலும் இரண்டு ஏக்கர், நிலம் அபகரிக்கப்பட்டு வேறு கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் அதனை அரச அதிகாரிகள், அரசியல் தலைமைகள் அனைவரும் கண்டும் காணாமல் இருந்துவருவதும், மௌனம் காப்பதும் கவலையளிப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வவுனியா நகரசபை. குளத்தின் நீரைக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாயம் குறித்தோ, அருகிவரும் வவுனியாவின் நிலத்தடி நீர்மட்டம் குறித்தோ, சுற்றுச்சூழல் பேரழிவு குறித்தோ எதுவித அக்கறையுமின்றியே இவை நடந்தேறுகின்றன. கடந்த ஓராண்டாக இச்செயற்பாடுகளுக்கு எதிராக கடந்த ஓராண்டாக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டும் துண்டுப்பிரசுரப் போராட்டத்தையும் நடாத்தியுள்ளனர். பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் இலங்கையின் வடபகுதியில் நிலத்தடி நீர்ப்பற்றாக்குறை அடிப்படை பிரச்சனையாக மாறிவிட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டம் மக்களை விழிப்படைய வைப்பதற்கான நல்லதொரு தொடக்கப்புள்ளியாகும். இந்த போராட்டத்தை மையப்படுத்தி அண்மையில வெளிவந்த பாடலுடன் தொடர்படுத்திய காணொளி: https://bit.ly/3sU1rCg

இவ்வாரக் கேலிச்சித்திரங்கள்: Cartoon-01, 02, 03, 04