கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

யாழ்ப்பாண மேயர் கைது
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அன்றிரவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கத்தைக் காட்டுவதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 8 மணியளவில் அழைக்கப்பட்ட மாநகர மேயர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது மாநகர மேயர் வி.மணிவண்ணன் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 20 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர். இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 120, 332, 343 ஆகிய இலக்கங்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க அனுமதிக்க வேண்டும் எனப் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். அதை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆட்சேபித்தார்.

“யாழ்ப்பாணம் மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட மாநகர சபை கட்டளைச் சட்டம் 73, 78, 83 ஆகிய பிரிவுகளின் கீழான பணியைப் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் நிறைவேற்றியவர் என்ற காரணத்துக்காக அவரைத் தண்டிக்க முடியாது. அதேநேரம் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையின் நிறத்தை ஒத்த நிறத்தில் இந்தச் சீருடை இருப்பதாகக் கூறி அதைப் பார்த்து பொலிஸார் மிரள்வது, போர் முடிந்து ஓர் தசாப்பதமாகியும் அந்த திகைப்பில் இருந்து பொலிஸார் இன்னும் மீளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது” என்று வாதிட்டார் சுமந்திரன்.

இதேநேரம் இது மாநகர சபையின் தீர்மானத்தை நிறைவேற்றிய செயல் என்பதோடு அதனை உறுதி செய்யும் வகையில் மாநகர சபையின் உறுப்பினரும் மற்றுமோர் சட்டத்தரணியுமான மு.றெமீடியஸ{ம் கூட மணிவண்ணன் சார்பில் நீதிமன்றில் ஆஜராகினார். மாநகர சபை ஊழியர்கள் அணிந்த உடையில் விடுதலைப்புலிகளின் அடையாளம் சார்பில் ஏதும் உண்டா என நீதிவான் வினவினார். இதற்குப் பொலிஸார் இல்லை எனப் பதிலளித்த நிலையில் மேயரை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிவான் விடுவித்தமையோடு வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

“யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல் எதுவுமில்லை. யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையாகப் பேணுவதற்காகக் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் சீருடை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறும்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சனிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை “யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமையானது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கத்துடனான ஒரு செயல்பாடு” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். “யாழ் மேயரை பயங்கரவாதி என முத்திரை குத்துவதன் மூலமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி குறித்த விசாரணையை அரசாங்கம் நிறுத்திவிட்டது” எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே, கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாநகர சபையில் மணிவண்ணனுக்கு ஆதரவளித்துவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு மன்னிப்பை வழங்கி, அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு, தான் ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாகவும், அந்த அடிப்படையில், அவருக்கு முதல் மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டால் அவர் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் செய்தி ஊடமொன்றிடம் தெரிவித்திருந்தார். டக்ளஸ் கூறியது போன்றே மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

இக்கைது நடவடிக்கைக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை வெளியிட்டார். அவரது டுவீட்: US Ambassador

ஞாயிற்றுக்கிழமை சிங்களப் பத்திரிகைகளில் இது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒரு முழப்பக்கக் கட்டுரைகள் பல சிங்களமொழிமூலப் பத்திரிகைகளை நிறைத்துள்ளன. இவை புலிகளின் மீட்சி என்று அச்சத்தை விதைப்பனவாக உள்ளன. சான்றுக்குப் பார்க்க: Mawbima


யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
“யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டமைக்கு வர்த்தகர்களும், மக்களும் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமையே பிரதான காரணமாகும்.” என்று கொரோனாத் தடுப்புக்கான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளும் ஞாயிறு முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக திரையரங்குகளில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடல் சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாகவும் இப்போது அதிகரித்துள்ள தொற்றல் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் நோக்காகக் கொண்டு குறித்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

“புத்தாண்டை முன்னிட்டு நகரப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. பொதுபோக்குவரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றுவதாக தெரியவில்லை. எனவே, நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான - கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழி காட்டல்களை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும்” என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்துக்குள் வெட்டுக்குத்து
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் 12 பங்காளிக் கட்சிகள் மீண்டுமொருமுறை தனிச்சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறித்து பொதுஜன முன்னணியினர் கடும் சீற்றத்தில் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான புதிய ஹெல உறுமய, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமை யிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, முன் னாள் அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 12 கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய சட்டம், மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப் பட்டன என்று சுதந்திரக் கட்சியின் உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அதேவேளை, அரசிலிருந்து விலகி தனிவழி செல்வதற்கான நகர்வா இது வென எழுப்பப்பட்ட கேள்விக்கு, இல்லை என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பதிலளித்தார். மே தினம் தனித்தா அனுஷ்டிக்கப்படும் என்ற கேள்விக்கு, கூட்டாகவும், தனித்தும் அனுஷ்டிப்பதற்கான உரிமை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆளும் கட்சிக்கும், பங்காளிக் கட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைத் திருத்திக்கொள்வது அவசியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பங்காளிக்கட்சிகள் இவ்வாறு தனித்துச் செயற்படுவது குறித்து அரசாங்கத்தின் பிரதான உறுப்பினர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளார்கள். ஜனாதிபதியின் நெருக்கிய சகாக்களுக்கும் இந்தப் பங்காளிக்கட்சிகளுக்கும் இடையிலான உறவு மோசமாக உள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அமைதியாக இருப்பதே இந்த நிலையை தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை பங்காளிக்கட்சிகள் தனித்தனியாகவும் சேர்ந்தும் கலந்துரையாடியுள்ள போதும் கடந்த வெள்ளிக்கிழமை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பங்குகொண்டமை பொதுஜன பெரமுன வட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மைத்திரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ஸ இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இப்போது கொழும்பு அரசியல் வட்டங்களில் பேசுபொருளாக இருப்பது “பொதுவேட்பாளர்” என்ற கருத்தாக்கமாகும். இது குறித்து அடுத்த வாரம் விரிவாகாப் பார்க்கலாம்.


சி.ஜ.ஏ உளவாளிக்கு பணம் வழங்கிய அரசாங்கம்
அமெரிக்காவில் தன்னை பற்றிய நற்பெயரை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் 2014 இல் மத்திய வங்கி ஊடாக அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கு பணம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது என தெரிவித்துள்ள வோல்ஸ்ரீட் ஜேர்னல் அந்த நபர் சிஐஏயின்யின் உளவாளி எனவும் தெரிவித்துள்ளது. இதன் ஆழத்தைச் சுருக்கமாகச் சொல்லும் Tweet

இமாட் ஜூபாரி என்பவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு புலனாய்வு தகவல்களை வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டு வந்தவர் என சட்ட ஆவணங்கள் மற்றும் அவரை நன்கறிந்தவர்களை மேற்கோள் காட்டி வோல் ஸ்ரீட் ஜேர்னலின் பத்திரிகையாளர் பைரன் டாவேர் தெரிவித்துள்ளார். இமாட் ஜூபாரியின் செயற்பாடுகள் குறித்து சில குற்றச்சாட்டுகள், அவருடன் இணைந்து பணியாற்றிய சிஐஏ அதிகாரிகளுடன் தொடர்புடையவை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருமுறை அவர் இலங்கையின் சார்பான திட்டமொன்றினை முன்னெடுப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இதுவே பின்னர் அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டாக மாறியுள்ளது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இலங்கையின் சார்பில் அந்த திட்டத்தை பொறுப்பேற்ற பின்னர் ஜூபேரி கடலோர கண்காணிப்பு அமைப்புமுறையொன்றை கொள்வளவுசெய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்,அதனை பயன்படுத்தி இந்து சமுத்திரத்தின் பெரும்பகுதியை கண்காணிக்க முடியும் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் ஜூபேரியிடம் வழங்கிய அதன் பொதுமக்களின் வரிப்பணத்தில் 87 வீதத்தினை அவர் தனது தனிப்பட்ட தேவைகளிற்காக செலவிட்டுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாடு ஒன்றிடமிருந்து பணம் உட்பட நன்மைகளை பெற்ற குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு 12 வருடசிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
வோல் ஸ்ரீட் ஜேர்னலின் கட்டுரையை வாசிக்க: https://www.wsj.com/articles/alleged-cia-ties-figure-in-case-of-convicted-political-donor-11617973201


நுண்கடன்களை இரத்துச் செய்யக்கோரிய போராட்டங்கள்
கடந்த வாரம் நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து நிதி அமைச்சுக்கு முன்னால் போராட்டங்கள் நடைபெற்றன. “செலுத்த முடியாது! செலுத்த மாட்டோம்!”, “பெண்களை பலி கொடுக்கும் நுண்கடன்களை உடனடியாக இரத்துச்செய்!” போன்ற கோசங்களை ஏந்தி பெண்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் இப்போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. படங்கள்: Protest 01,02,03


இவ்வாரக் கேலிச்சித்திரங்கள்: Cartoon-01, 02, 03, 04