கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

கொழும்பு துறைமுக நகரம்: அரசாங்கத்திற்கு புதிய நெருக்கடி
ஞாயிற்றுக்கிழமை சிங்களப் பத்திரிகைகளின் பிரதான செய்தி இதுதான். கொழும்புத் துறைமுக நகரம் சீனாவின் கொலனியா? பார்க்க: Divayina, Mawbima, Port city Story
சீனாவின் நிதியுதவியில் உருவாக்கப்படுகின்ற கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டடுள்ள சட்டமூல வரைபு இலங்கை அரசியலை உலுக்கியுள்ளது. “கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு” என்று தலைப்பிடப்பட்ட இந்த சட்டமூலம் கடந்த 8ம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த சட்டவரைபு இலங்கையின் அடிப்படைச்சட்டங்களைப் புறந்தள்ளி சிறப்புரிமைகளுடன் இப்பகுதியில் அலுவல்கள் நடப்பதை அனுமதிக்கிறது. சட்டமூலத்தை வாசிக்க: English, தமிழ்

இலங்கையில் அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்டுள்ள ஒரு சட்டமூலத்தை எதிர்த்து 7 நாட்களுக்குள் நீதிமன்றம் செல்லமுடியும். இந்நிலையில் கடந்தவாரம் அரசாங்கம் திடீரென்று 12ம் திகதியை பொது விடுமுறையாக அறிவித்தது. இதனால் இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு ஒருநாள் அவகாசமே இருந்தது. இருந்தபோதும் இச்சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றில் 19 விஷேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் நாளை 19 ஆம் திகதி திங்களன்று பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்; மேற்படி மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன. இவ்வாறு பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ள மனுக்கள் அனைத்தும் அரசமைப்பின் 120 ஆவது உறுப்புரைக்கு அமைய உயர் நீதிமன்றின் அரசமைப்பு சார் நியாயாதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களில் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த 19 விஷேட மனுக்களிலும், அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் 13 பிரிவுகள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த 13 பிரிவுகளும் சாதாரணமாக சட்ட மூலம் ஒன்று சட்டமாக நிறைவேற்றப்படும் படிமுறையில் நிறைவேற்ற முடியாது எனவும், அதில் 7 விடயங்கள் அடங்கிய பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும், 6 பிரிவுகளை நிறைவேற்ற பாராளுமன்றின் மூன்றிலிரண்டு விஷேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என நாராஹேன்பிட்ட அபேயராம விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் விசேட சட்ட மூலம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை; இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2015ம்ஆண்டு ஜனவரி மாதத்தில் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து அவரது அரசியல் மீளெழுச்சியில் முக்கிய பங்காற்றியவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு துறைமுக நகரத்திற்கோ முதலீடுகளுக்கோ தாம் எதிரானவர் அல்ல எனத் தெரிவித்த தேரர் கொழும்பு துறைமுக நகரமானது இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் இலங்கை சீனாவின் காலனியாக மாறும் அபாயமுள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயதாச இராஜபக்சவும் பங்கேற்றியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மறுநாள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விஜயதாச இராஜபக்ச கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை விமர்சித்து தான் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து அது பற்றி தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவித்தார்.

“தற்போதைய ஜனாதிபதியை பதவிக்கு கொண்டு வர நாம் கடுமையாக பாடுபட்டோம். இந்த ஜனாதிபதியின் கீழ் நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் ஊர் ஊராக சென்று பிரசாரங்களில் ஈடுபட்டோம். அத்துடன் ஊழல் மோசடிக் காரர்களுக்கு அரசாங்கத்திற்குள் இடமளிக்கப்படாது என்றும் கூறினோம். இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக நான் கருத்துக்களை முன்வைத்தேன். அது தொடர்பான ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நான் கருத்துக்களை முன்வைத்தேன். இதனை தொடர்ந்து ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். ஜனாதிபதி என்பதனால் அவர் கௌரவமாக கதைப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். அவர் குறித்த விடயம் தொடர்பாக விளக்குவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் மோசமான வசனங்களை பயன்படுத்தினார். இதன்போது அவரைப் போன்றே நானும் பதிலளித்தேன். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக மக்கள் தமது உரிமைகளை பாதுகாக்கவே எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி கதைத்த முறையில் தவறு இருப்பதாக கருதுகின்றேன். அவர் மோசமான வார்த்தைகளால் பேசியது பாரதூரமானதே. எம்.பி.க்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால் அது மிகவும் ஆபத்தானது.இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் போது உயிர் தொடர்பில் பயம் ஏற்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு நான் அறிவித்துள்ளேன் என்றார்.

இதேபோலவே வியாழக்கிமை ஊடக சந்திப்பை நிகழ்த்திய நாராஹேன்பிட்ட அபேயராம விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் வெள்ளிக்கிழமை “நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எவரேனும் அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிப்பார்களாக இருந்தால் அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு மகா சங்கத்தினர் பின்வாங்க மாட்டார்கள்” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவி;த்தார். அவரையும் தொலைபேசியில் ஜனாதிபதி கடுந்தொனியில் திட்டியதாக செய்திகள் கிடைக்கின்றன.

இலங்கைக்குள் வேறொரு நாட்டின் மாநிலத்தை நிறுவுவதற்கான நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையை சீனவின் காலனியாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்க அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், 1,115 ஏக்கர் நிலத்தின் கட்டுப்பாட்டை சீனாவிடம் இலங்கை இழக்கும்.; இலங்கையின் எந்தப் பகுதியையும் நிர்வகிக்க மற்ற நாடுகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ மீது விரைவில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். இதைத்தொடர்ந்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் , “நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றபோது, அது சட்டத்துக்கு முரணான செயல்பாடு என தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ ஆவார். அவ்வாறான நபருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவிப்பது முறையான நடவடிக்கை அல்ல என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் விஜயதாஸ ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் குறித்தும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாஸ ராஜபக்ச மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இவ்விடயம் தொடர்பான பயனுள்ள கட்டுரை: Wijeyadasa Rajapakshe

ஜனாதிபதியை ஹிட்லராகுமாறு கோரிக்கை
ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர் என இராஜங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர் ஹிட்லர் அவர் அரசியல்வாதிகளிற்காக முன்னுதாரணம் இல்லை என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்திலேயே தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு ஹிட்லர் தேவையில்லை. நாட்டை நேசிக்கும் சிறந்த தலைவரே தேவை. இந்த நேரத்தில் அந்த தலைவர் எங்களிடம் இருக்கிறார் என நான் நினைக்கிறேன் என நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாத தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும், மனித உரிமைகள் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச ஜரிகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பார்க்க: https://www.icj.org/sri-lanka-new-anti-terror-regulations-aimed-at-organizations-further-undermine-the-rule-of-law/

இதேவேளை இராணுவதளபதி சவேந்திர சில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதி;க்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. பார்க்க: ITJP

“இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான பணிகளையே முன்னெடுக்கின்றது. ஆனால், வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டுள்ள சிலரே இராணுவம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். உண்மையில் இராணுவம் என்ன செய்கின்றது என்பதைத் தமிழ் மக்கள் அறிவார்கள்” எனஇராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

“இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சி முறையின் ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். சிறுபான்மையினச் சமூகங்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார். கடந்தவாரம் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும்: “இலங்கை அரசுகளால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர்பார்க்கின்றது” – என்றும் குறிப்பிட்டார்.

ஆளும் கூட்டணிக் குழப்பங்கள்
மே தினக் கொண்டாட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீர்வை எட்டலாம் எனத் தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறியுள்ளதாவது: “ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அனைத்துக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தங்களுடைய சொந்த நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் வைத்திருப்பது இயல்பானது. இது புதியதொன்றல்ல. அந்த அடிப்படையில் கூட்டணி கட்சிகள் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடும். அப்படிக் கூறுவதால் கூட்டணியின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்த்தமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கு எதிரணியினர் பல வழிகளிலும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசிலுள்ள எவரும் இதற்குத் துணைபோகக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம்; வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. “அரசிலுள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடிப் பேசுவதில் தவறு இல்லை. ஆனால், அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகக்கூடாது. இக்கூட்டணியின் தலைவராக – பலம் மிக்க தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். பங்காளிக் கட்சிகள் தங்கள் குறைநிறைகளை அவருடன் நேரில் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். இதைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது. என ஜனாதிபதி தெரிவித்தாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அரசாங்கம் மக்கள் ஆணைக்கு இசைவாக நடக்கவில்லை என அமைச்சரும் கூட்டணிக் கட்சித் தலைவருமாகிய உதய கம்மன்பில்ல தெரிவிக்கின்றார்: பார்க்க

புலிகளை உருவாக்க முயற்சி: ஜவர் கைது
பயங்கரவாத செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவை சேர்ந்த ஐந்து பேர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய், பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நான்கு பேர் நேற்று அதிகாலை பயங்கரவாத விசாரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவரும் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இவர், அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் பிடிபட்டவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார் என்றும், யாழ்ப்பாணத்தில் கைதானவர்களுடனும் தொடர்பைப் பேணினார் எனவும் கூறப்பட்டது. இவ்வாறு கைதானவர் 45 வயதான முன்னாள் போராளி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாவதன் காரணமாக, அவர்கள் தொடர்பில் முகாமைத்துவ நடவடிக்கை செய்ய நேரிடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் எஸ்.எம் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர கவலை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் இந்த நடத்தைகளின் விளைவாக கடுமையான எதிர்மறையான தாக்கம் எதிர்காலத்தில் வெளிப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சுகாதார ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் பொது மக்கள் தற்போது பொறுப்பற்ற வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை தொடர்ந்தால் சுகாதார விதிமுறைகளை கடுமையான முறையில் செயற்படுத்தவேண்டி ஏற்படும் என சுதத் சமரவீர எச்சரித்துள்ளார். இதேவேளை, தடுப்பூசியின் இரண்டாவது ஊசியை வழங்குவது தொடர்பான இறுதி முடிவை அடுத்த வாரம் சுகாதார அமைச்சு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை மாலை வரையான நிலவரப்படி ஆயிரத்து 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 12 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவதாக அரச அதிபர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 42 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையிலேயே அதிகூடிய பி.சி.ஆர். பெறுபேறுகளைப் பெற்ற மாவட்டமாக யாழ். மாவட்டம் உள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக்குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தμ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், பொதுமக்கள் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதாμ நடைமுறைகளைப் பின்பற்றி தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளைத் தவிர ஏனையவற்றுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் ஆயிரத்து 523 குடும்பங்களுக்கு சுமார் 15.23 மில்லியன் ரூபாய் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்னும் 491 குடும்பங்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்குவதற்குரிய 4.9 மில்லியன் ரூபாய் நிதி இந்தவாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தாண்டுக் கொடுப்பனவாக அரசாங்கம் அறிவித்த வறிய மக்களுக்கான ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவில், யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 178 குடும்பங்கள் தகுதி பெற்றிருந்தன. அவற்றில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 855 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு வழங்குவதற்குரிய நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறியுள்ள நிலையில், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ளது எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சுகாதார பரிசோதகர் சங்கத்தால் பல முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் அதனைப் பொருட்படுத்தாது தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மே மாதத்திலிருந்து தோன்றும் புதிய கொரோனாக் கொத்தணிகளைச் சமாளிக்க அதிகாரிகள் இப்போதிருந்தே மருத்துவமனைகளைத் தயார் செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். திருமதி இலங்கை சர்ச்சை, சுற்றுச்சூழல் பிரச்சினை மற்றும் நஞ்சுப் பொருள் அடங்கிய எண்ணெய்ப் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியில் அதிகரித்து வரும் மிகத் தீவிரமான கொரோனா வைரஸ் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது எனவும் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக கொரோனா வைரஸ் தற்போது இல்லை என்ற எண்ணத்தில் பொதுமக்களும் செயற்படுகின்றனர் எனவும், ஏற்கனவே கொரோனா குறித்து மக்களிடம் இருந்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்துவது கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.


இவ்வாரக் கேலிச்சித்திரங்கள்: Cartoon-01, 02, 03, 04