கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம்
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் பென்ஹி, இலங்கை வந்திருந்தார். அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் வெய் பென்ஹி, நடைமுறை சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த விஜயம் தொடர்பாக இரண்டு முக்கியமான செய்திகள் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியாகின. முதலாவது, இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உதவி உத்தரவாத உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இது இலங்கை மீது கவனம் செலுத்துகின்ற ஏனைய நாடுகளுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பிலான செய்திக்கு: Ceylon Today
இரண்டாவது, அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் இரகசியம் ஒன்றைச் சொல்லியுள்ளார். அதைத் தெரிந்து கொள்ள: Mawbima

உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன. சீனாவிலிருந்து பாதுகாப்பு அமைச்சரோடு பலம்மிக்க குழு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் சீன இராணுவ இணைந்த படைகளின் பிரதிப் பிரதானியான லெப்டினன்ட் ஜெனரல் ஷாவோ யுவான்மிங், மத்திய இராணுவ ஆணைகுழுவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி குவேய், பொது அலுவலக பிரதி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷென் பாங்வ், தென் பிராந்திய கட்டளையகத்தின் உதவிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹ_ சியான்ஜுன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதேவேளை கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பான முழுப்பக்க விளம்பரங்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் கடந்தவாரம் முழுவதும் வெளியாகின. உதாரணத்திற்கு: Colombo Port City-AD-1, 2

சீன பாதுகாப்பு அமைச்சர் தனது இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சில மணி நேரங்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.


தன் பணியைத் தொடங்கியது ஐ.நா
ஜெனிவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை விரைவாக அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி போரின் போது மற்றும் அதற்குப் பிறகான மனித உரிமைகள் மீறல் தொடர்பாக தகவல் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவை இதில் அடங்கும். அதன்படி, இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் குழுவை மனித உரிமை கள் ஆணையாளர் அலுவலகம் திரட்டி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இந்த விசார ணைக் குழுவில் இலங்கையின் பிரதிநிதியைத் தவிர்ப்பதற்கான அவர்களின் முடிவு குறித்து அரசாங்கம் விரைவில் முறையான பதிலை அளிக்கும் என கூறியுள்ளார். இருந்தபோதிலும், இது யோசனையாக மட்டுமே இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும் நிதிப்பற்றாக்குறை செயல்முறைகளை மேற்கோள் காட்டி சர்வதேச நிபுணர்கள் குழு பெரும்பாலும் ஜெனிவாவில் இருந்தே செயற்படும் என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கூறியிருந்தது. இவ்வாறு பெயரிடப்பட்ட வர்களில் பலர் இலங்கையின் பண்பாடு மற்றும் பின்னணிக்கு அந்நியர்கள் என்பதால் அத்தரப்பினரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி செயற்படுவதன் ஒருதலைப்பட்ச நடவடிக்கை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடி: திணறும் அரசு
“கொரோனா பிரச்னைக்குத் தீர்வாக சில காலம் நாட்டை மூடி வைக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் அத்தகைய நடைமுறையின் மூலம் திருப்தியான பெறுபேறு கிடைக்கப்பெற்றபோதும் நீண்டகாலத்தில் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார செயல்பாடுகளை முற்றாக முடக்கிவிடக்கூடிய வகையில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு செய்ய முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதால், தொற்றாளர்களை அடையாளம் காணும்வரையாவது முழுநாட்டையும் முடக்கவேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் அச்சுறுத்தலான நிலைமையே காணப்படுகின்றது. இதனை உரியவகையில் முகாமை செய்யாவிட்டால் எல்லாம் கைமீறி சென்றுவிடும். இந்நியாவின் நிலைமை இங்கு உருவாகிவிடும். எனவேதான் நாட்டை முடக்குமாறு கோருகின்றோம். அதேவேளை, பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார நடைமுறை களை முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அரசும் உடன் கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்;.

சுகாதார அமைச்சு வழங்கிய சில தகவல்கள் பொய்யானவை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சுகாதார அமைச்சால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சில தகவல்கள் பொய்யானவை என்பது நிரூபணமாகியுள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கொவிட் நோய்த்தொற்று தொடர்பில் மக்கள் மீது குற்றம் சுமத்தாது, அரசாங்கத் துக்கும் சுகாதார அமைச்சுக்கும் சில முக்கிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது. நோய்த் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எவ்வாறு வைத்தியசாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன? எத்தனை புதிய கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கான ஆளணி வளம் உண்டா? வெறுமனே கட்டில்கள் மட்டும் போதாது? அனைத்து விடயங்களும் யும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. உலகப் பெருந்தொற்று நிலை மைகளின் அடிப்படையில் நோய்த்தொற்றாளர்கள் குறையலாம், கூடலாம். எனினும் உலகப் பெருந்தொற்றுப் போக்கை அவதானித்து அதற்கமைய செயற்பட வேண்மெனத் தெரிவித்துள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன, நாளைக்கு எத்தனை நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகின்றது என்பது தொடர்பாக அரசாங்கத்துக்குத் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. போதியளவு வைத்தியசாலை வசதி உண்டு என அரசாங்கம் குறிப்பிட்ட போதிலும், நோய்த்தொற்றாளர்கள் பலர் வைத்தியசாலையிலோ அல்லது சிகிச்சை நிலையங்களிலோ அனுமதிக்கப்படாத நிலைமையை அவதானிக்க முடிகின்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நாட்டில் கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டது. அதில் குறிப்பாக, கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும், வெசாக், றமழான் பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் போன்றன இடம்பெற்றுள்ளன. முழுமையான அறிவித்தலைக் காண: Covid-19 Regulations

இதேவேளை இலங்கையின் எல்லைகளை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. அதனடிப்படையில் விமான நிலையம் விரைவில் முழுமையாக மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன. அதேவேளை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை நீடிக்க யோசனைகள் உள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ‘வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற மக்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும். நாங்கள் தற்போது அதற்கான வேலையையே செய்கின்றோம். தனிமைப்படுத்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காணத்தேவையான நேரத்தை இதனூடாக பெறுவதே நோக்கமாகும்’ என சுகாதார அமைச்சின் பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ். எம். ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்
அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அரசுக்குள் இருந்து விமர்சிக்கும் நபர்கள் அரசில் இருந்து வெளியேறி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் கடந்த ஞாயிற்றுகிழமை ஆவேசத்துடன் தெரிவித்தார். அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அரசாக எடுக்கும் தீர்மானங்கள் சகலரையும் சார்ந்ததாகும். அரசுக்குள் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசை விமர்சிக்கும் ஜனநாயக உரிமை சகலருக்கும் இருக்கின்றது. எனினும், ஆட்சியாளர்கள் அல்லது ஆளும் கட்சிக்குள் உள்ள அமைச்சர்கள், உறுப்பினர்கள் அரசை மோசமாக விமர்சித்து நெருக்கடிகளை ஏற்படுத்துவதானது, ஆட்சியைக் கொண்டு செல்லக் கடினமானதாக அமையும். அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவர்கள் வெளியில் சென்று தமது விமர்சனக் கருத்துக்களை
முன்வைக்க முடியும் என்றார்.


பூநகரியில் மீன்பிடிக்கத் தடை
பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி கடலில் தொடர்ச்சியாக சென்று மீன்பிடிக்க கடற்படை அதிகாரி தடை விதித்துள்ளார் என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பூநகரி - கிராஞ்சி பகுதியினர் கடற்றொழிலையே பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை அதிகாரி அவர்களை மீன்பிடி தொழிலை முன்னெடுக்க முடியாதவாறு தடை விதித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், குறித்த கடற்படை அதிகாரி சில வருடங்களுக்கு முன்னால் மீனவர்களை தாக்கினார் என்றும், இதனால் அவருக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கு தண்டனை வழங்க அன்றைய கடற்படை பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுத்தார். எனினும், மக்களின் வேண்டுதலின் பெயரில் அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்தப் பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாக வந்துள்ள இடமாற்றம் செய்யப்பட்ட கடற்படை அதிகாரியால் தற்போது மக்களுக்கு எதிராக பல அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்று குற்றஞ் சாட்டப்படுகின்றது. இந்நிலையில், அவர்களை மீன்பிடி தொழிலில் ஈடுபடமுடியாதவாறு தடையை ஏற்படுத்தியுள்ளார் என்றும், தம்மை அடிமைகள் போன்று நடத்த முற்படுகின்றார் எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். மேலும், குறித்த கடற்படை அதிகாரி தகாத வார்த்தைகளால் மீனவர்களை ஏசுகிறார் என்றும் கூறப்பட்டது. எனவே, இது விடயத்தில் பொறுப்பானவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாம் தொடர்ச்சியாக முன்னர் போன்று தொழிலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கிராஞ்சி பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சுமந்திரன் குறிவைக்கப்படுகிறாரா?
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது தொடர்பாக இந்தியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆ.கே. ராதாகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளிலொன்றான இந்துப்பத்திரிகையின் இலங்கைக்கான செய்தியாளராக பணிபுரிந்தவரான ஆ.கே. ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ‘சுமந்திரனின் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. விமானநிலைய அதிவேகவீதியில் மற்றுமொரு விபத்திற்குள்ளானதாக சற்றுமுன்னர் செய்தியொன்றைப்பார்த்தேன். இது யாரேனும் அவரை (அரசியல்) வெளியில் இருந்து இல்லாதொழிக்க முற்படுவதன் காரணமாகவா?’. டுவிட்டைக் காண: Tweet_Sumanthiran

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இந்தவிபத்தில் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போது அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

2020ம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கை வெளியானது
இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மனால் வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கிவைக்கப்பட்டது. நாணய விதிச் சட்டத்திற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, ஆண்டு தோறும் ஏப்ரல் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நிதி அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட வேண்டும். அதற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அரச கொள்கை கட்டமைப்பிற்குள் இலங்கை பொருளாதாரத்தின் போக்குத் தொடர்பான கணிப்பும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இன்றைய நிலை, பொருளாதார எதிர்காலம் போன்றவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள இவ்வறிக்கை அடிப்படையானது. பார்க்க: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2020

இதேவேளை இலங்கையின் மோசமான பொருளாதார நிலையினை எடுத்துக்காட்டும் கட்டுரை ஞாயிறு தினகரனில் வெளியாகியிருக்கிறது. அக்கட்டுரை “வவுனியாவில் ஊதுபத்தி விற்கும் சிறார்கள்” எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. கட்டுரையை வாசிக்க: தினகரன்


தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4