கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்


கூட்டமைப்பு - முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து போட்டி?
தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் தெரிவித்தன. மட்டக்களப்பில் கடந்த ஞாயிறு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்: “தமிழ் பேசுகின்ற மக்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். தமிழ் மக்கள் மாத்திரமல்லாது தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ் பேசுகின்ற மக்களாக நாங்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாணமும் தமிழ் பேசுகின்ற மாகாணம் என்ற ரீதியில், அதன் அடையாளத்தை பேணும் வகையில், நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம்" என்று கூறினார். இது தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அதனை தமது கட்சி பரிசீலிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ் பேசும் மக்கள் கைப்பற்ற வேண்டிய தேவை இருப்பதனால், தமிழ் முஸ்லிம் சக்திகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலேயே பேசப்பட்டது. எனினும் அந்தப் பேச்சில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும், இதனை சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச் வார்த்தைகளையும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். அவர்: 'ஊடகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸ{டனோ எந்தவிதமான பேச் வார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடும்" என்று தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் சிங்கள முதலமைச்சர்!
கிழக்கு மாகாணத்தில் சிங்கள முதலமைச்சர் ஒருவரைக் கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தில் 20 ஆவது திருத்தத்துக்கு கை தூக்கிய அரசின் கைக்கூலிகளான சில முஸ்லிம் எம்.பி.க்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அதற்கான சூழ்ச்சியே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமிறக்கம் எனவும் தெரிவித்தார். மாகாண சபைக்கான தேர்தல்கள் நடக்குமா நடக்காதா என்பது தெரியாத நிலையில் 20ஆவது திருத்தத்துக்கு கை தூக்கிய அரசின் கைக்கூலிகளான சில முஸ்லிம் எம்.பி.க்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்கள முதலமைச்சர் ஒருவரைக்கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே இந்த அரசின் அடிவருடிகளான சில முஸ்லிம் எம்.பி.க்கள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கி தமிழ்முஸ்லிம் மக்களை மோத விடும் சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். முஸ்லி ம் மக்களின் தலைவர்களில் ஒரு வரான ரிசாத் பதியுதீனைக்கைது செய்ததற்கு எதிராக இந்த கைக்கூலிகள் குரல் கொடுத்தனரா? அல்லது அசாத் சாலியின் கைதுக்கு எதிராக குரல் கொடுத்தனரா? அல்லது முஸ்லிம் பெண்களின் புர்கா ஆடை மீதான தடைக்கு எதிராக குரல் கொடுத்தனரா? அல்லது மதரஸாக்களை தடை செய்யும் முயற்சி க்கு எதிராக குரல் கொடுத்தனரா? இல்லை. கிழக்கில் முஸ்லிம் மக்களுக்காக நாம் எவ்வளவோ விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளோம். அஷ்ரப் வைத்தியசாலையை நாம் எதிர்க்கவில்லை. மட்டக்களப்புடன் நிலத் தொடர்பற்ற கல்வி வலயத்தை நாம் எதிர்க்கவில்லை. இப்படி பல விட்டுக்கொடுப்புக்களை செய்துள்ளோம். இன்றும் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் கிழக்கில் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்த அரசின் அடிவருடிகளான ,முஸ்லிம் மக்களுக்காக குரல்கொடுக்காத இந்த எம்.பி.க்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்கள முதலமைச்சரைக்கொண்டுவரத் தயாராகியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக சில நாள்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சகோதர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் அரசியல் ரீதியாக உபபிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக கல்முனை விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது பழிபோடுவது போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் கடந்த 1989 இல் அநீதி இழைக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்தினருக்கே. ஆனால் அந்த அநீதியை பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துடன் பேசி சரி செய்ய முன்வராமல் இன்னும் ஒரு பொய்யை ஆயிரம் தடவை சொல்லி உண்மையாக்க எத்தணிக்கிறார்கள் என தெரிவித்தார்.


நகரத்தொடங்கும் ஜெனீவா வண்டி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரிட்டனும், அமெரிக்காவும், தீவிரமாக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன என இராஜதந்திர வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா தீர்மானம் தொடர்பாக கூட்டாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக சிலர் மீது பயணத் தடை விதிக்கப்படக் கூடும் என்றும் இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமெரிக்கா முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் மீது பயணத் தடைகளை விதித்திருக்கின்றது. மேலும் சிலருக்கு பயணத் தடைகள் விதிக்கப்படலாம் எனவும், அது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புக்களின் உயர் அதிகாரிகளும் இந்த தீர்மானத்தினை நடைமுறைச்சாத்தியமாக மாற்றுவதற்கான நட வடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தன. எவ்வாறாயினும், இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், அரசாங்கத்தினை தொடர்புபடுத்தாது, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூகத்தின் ஊடாக முன்னெடுப்பதே திட்டமாக உள்ளது. அதேவேளையில், முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் மற்றும் இராஜதந்திரப் பதவிகளை வழங்குவது குறித்தும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கடும் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஊடகவியலாளர்கள் மீது வன்முறை
ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துச் சுதந்திரத்தை, குறிப்பாக ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்பதிவில் சுட்டிக் காட்டியிருக்கும் மன்னிப்புச்சபை, ஊடகத்துறையில் பணியாற்றுவோருக்கான பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதன் மூலம் அவர்கள் எவ்வித அச்சமும், இழப்புமின்றி உண்மையான செய்திகளை அல்லது தகவல்களை வெளியிடுவதற்கு
அல்லது பேசுவதற்கு இடமளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அண்மைய வருடங்களில் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மிகவும் கவலைக்குரியவையாகும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பக்கச்சார்புமின்றி முழுமையாக விசாரணை மேற்கொள்வதுடன், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. பார்க்க: Amnesty International


நிமலராஜன் கொலை வழக்கு கைவிடப்படுகிறது
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைகளம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலையில், நாகர்கோவிலில் இலங்கை விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கிவிட்டு, தமிழ் நாளிதழ் ஒன்றுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்தபோதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர். அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். தமிழ், சிங்கள ஊடகங்களுக்கு செய்தியாளராளராக யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றியிருந்தார் நிமலராஜன். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் பொலிஸ் தலைமையக சட்டப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்ட மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிமலராஜன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பரிந்துரை வழங்கியுள்ளார். அத்துடன், வழக்கின் சந்தேக நபர் களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ் உள்ளிட்டவர்களே நிமலராஜன் கொலை வழக்கில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் நிலங்கள் அபகரிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டுத் தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் இந்தச் செயற்பாடு, தனித் தமிழ் முல்லைத்தீவில், சிங்கள அலகொன்றை ஏற்பாடுத்துவதற்கான முயற்சி என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பான மகஜர் ஒன்றை அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை ரவிகரனிடம் கையளித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாயாற்றுக்குத் தெற்கேயான காணிகள் சம்பந்தப்பட்ட விடயத்திலே, அந்த மக்களால் கடந்த திங்கட்கிழமை என்னிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் செம்மலை வரையான எட்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய மக்களையும், மக்களோடு சேர்ந்த காணிகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது நிர்வாகத்திற்குள் உள்வாங்குவதற்குத் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இவ்வாறானதொரு முன்னெடுப்பை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை அப்பகுதி மக்கள் நிராகரித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது நிர்வாக அலகிற்குள் குறித்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்வாங்குவதற்கு தீவிரமாகச் செயற்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு திட்டத்தை வலிந்து திணித்து, வெலிஓயா என்று உருவாக்கப்பட்ட சிங்களப் பகுதிகளுடன் இந்த மக்களை இணைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குகின்றன. தொடர்ந்தும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் காணி நிர்வாகத்தின் கீழேயே இந்த எட்டுக் கிராம அலுவலர் பிரிவுகளும் இயங்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக தாயகப் பகுதியான மணலாற்றில் சிங்களமயமாக்கலை இவர்கள் வலிந்து திணித்துள்ளனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக மணலாற்றை அண்டிய தமிழ் குடியிருப்புக்களையும் ஏற்கனவே சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளோடு இணைப்பதனூடாக தமிழ் மக்களை அங்கு சிறுபான்மையினராக்கி, பெரும்பான்மையாக சிங்கள மக்களை அப்பிரதேசத்திற்குள் உள்வாங்கி, அவ்வாறு உருவாக்கப்படுகின்ற பகுதியை ஒரு மாவட்ட அலகாகவோ அல்லது, பிரதேச அலகாகவோ தங்களுடைய திட்டத்திற் கேற்ப தனித் தமிழ் முல்லைத்தீவில் ஒரு சிங்கள அலகை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இது இருக்கின்றது. அதேவேளை வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளாக இந்த இடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு, கிழக்கை இணைக்கும் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள மயப்படுத்தி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளைக் கூறுபோடும் நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


கொரோனா குளறுபடிகள்
கடந்தவாரம் பொலிஸாசாரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பிரதான நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் கைது செய்யப்பட்டு குண்டுக்கட்டாக பொலிஸ் நிலையங்களுக்குச் தூக்கிச்; செல்லப்பட்டனர். இச்செயல் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்கிறதா எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். காணொளியை காண: https://www.youtube.com/watch?v=bGwYmLcHJ-o&t=26s

கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமடைந்தாலேயே நாட்டை முற்றாக முடக்குவோம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நிலைமைகளை அரசு கையாளும் விதம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தடுப்பூசிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் நிலைமைகளையும் மீறி நாட்டில் வைரஸ் பரவல் காணப்படுமாயின், நிலைமைகள் மோசமடையுமாயின் அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தேவைப்படின் நாட்டை முற்றாக முடக்க முடியும் என்றார். இதேவேளை “தற்போது முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றது. கொரோனாத் தொற்று காரணமாக நமக்கு நாட்டை ஒருபோதும் முடக்க முடியாது” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவி வருகின்றன என்று ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று அதன் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். பார்க்க: Covid Varients in SL

இதேவேளை இந்தியாவை விட இலங்கையில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக்குழு உறுப்பினருமான டொக்டர் தணிகைவாசன் ரட்ணசிங்கம் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டார். இலங்கையில் தற்போது கொரோனா பரவல் வேகம் பிரேஸில் நாட்டை ஒத்திருப்பதை தரவுகள் உணர்த்திநிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவரது முழுமையான நேர்காணலைக் காண்க: https://www.youtube.com/watch?v=oTUHmxf0sho

இலங்கையில் கொரோனா சிகிச்சை நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக 5000க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, தற்போது நாட்டில் மொத்தம் 18830 கொரோனாவா தொற்றாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 13043 பேர் மட்டுமே அரசின் கொரோனா சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5787 கொரோனாத் தொற்றாளர்கள் இன்னும் மருத்துவமனைகள் அல்லது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படவில்லை என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையர்கள் இதனை மிகவும் பாரதூரமான விடயமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தடுப்பூசி ஏற்றல் மாத்திரம் இந்தப் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வு கிடையாது என உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி டொக்டர் ஒலிவியா நிவேராஸ் தெரிவிக்கின்றார். நாடுகள் தடுப்பூசி ஏற்றுவதனால் மாத்திரம் இந்த நிலைமையில் இருந்த விடுபட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தீவிரம் பெற்றுவரும் கொரோனா நெருக்கடி நிலையின் முக்கிய சவால் மிக்க கட்டத்திற்கு நாம் தற்போது பிரவேசித்துள்ளோம் என இலங்கையர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, தற்போது நாட்டில் மொத்தம் 18 ஆயிரத்து 830 கொரோனாவா தொற்றாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 13 ஆயிரத்து 43 பேர் மட்டுமே அரசின் கொரோனா சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்து 787 கொரோனாத் தொற்றாளர்கள் இன்னும் மருத்துவமனைகள் அல்லது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படவில்லை என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானமாக செயல்படவேண்டும். இங்கு கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலை காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையும் அபாயம்
கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக வாக்காளர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 761 பேரால் குறைவடைந்துள்ளது. மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மாத்திரம் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளமையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தாக்கம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கடந்த மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு பட்டியலில் 4 இலட்சத்து 79ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் அந்த எண்ணிக்கை 4 இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆகக் குறைந்துள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு 92 ஆயிரத்து 264 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2020ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 370 ஆக அது அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கும் 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் முதல் தடவையாக மீளாய்வுக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது 21 ஆயிரத்து 905 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இவர்கள் எங்கிருந்தாலும் தமது பதிவுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆதனைவிட யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் விசேட நடவடிக்கைகள் சிலவற்றையும் முன்னெடுத்திருந்தது. நீக்கப்பட்ட பெயர்களுக்குரியவர்களின் பதிவுகளின் அடிப்படையில் நேரில் சந்தித்து வாக்காளர் பதிவு விண்ணப்பப்படிவத்தை கையளித்திருந்தது. அந்தப் பகுதிக்குரிய பொது அமைப்புக்கள் ஊடாகவும் பெயர்ப்பட்டியலிருந்து நீக்கப்பட்டவர்களில் முடியுமானவர்களை தொடர்புகொண்டு பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். கிராம அலுவலர்கள் ஊடாகவும் பதிவுக்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனடிப்படையில் 4 ஆயிரத்து 302 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்படாத 17 ஆயிரத்து 603 பேர் பெயர்ப் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


கடந்தவார நாளிதழ்களில் இருந்து:
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோயாளரை திருப்பியனுப்பும் அவலம்! பார்க்க: Tellipalai

இந்தியா இலங்கை உறவு குறித்தும், தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள ஆட்சிமாற்றம் குறித்தும் பல செய்திகள் கடந்தவாரம் நாளிதழ்களில் வெளியாகின. அவற்றில் கவனிப்புக்குரிய இரண்டு கட்டுரைகள் பார்வைக்கு: Katchatheevu, Marupakkam

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கொலை பற்றி அன்மையில் வெளிவந்த புத்தகம் இப்போது இலங்கை அரசியல் வட்டங்களில் பேசப்படும் ஒரு புத்தமாகும். அது பற்றி: Book

அதிகரித்துள்ள சீனா-இலங்கை நட்புறவை சிங்களப் பெருந்தேசியவாதிகள் எவ்வாறு விளங்குகிறார்கள் என்பதைப் புரிய உதவும் கட்டுரை: China-SL_Sinhala Version

 

 

தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4