கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்


முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சிதைப்பு
வன்னியில் இறுதிப் போரில் அரச படைகளால் கொன்றழிக்கப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் மே 18இல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு முற்றம் புதன்கிழமை இராணுவத்தினரால் இரவோடிரவாக சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சின்னமும் அவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அங்கு புதிதாகக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக அதிக எடையுடைய புதிய நினைவுக் கல் நினைவேந்தல் நிகழ்வு குழுவினரால் இராணுவத்தினரின் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் மாலை அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. அதையடுத்து அங்கு நேற்றுமுன்தினம் மாலை முதல் இராணுவத்தினர் பாதுகாப்பில் இருந்தனர். குறித்த பகுதி யாரும் நுழைய முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன் இரவு அந்தப் புதிய நினைவுக்கல் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த நினைவு முற்றமும் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சின்னமும் இராணுவத்தினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக்கூடாது, மக்கள்கூடக் கூடாது, பொது இடத்தில் வைத்து எந்த நினைவுகூரக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸார் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவு ஒன்றைக் கோரினர். இதன்படி, கோவிட் 19 நிலையை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக் கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூரக்கூடாது என்று அந்த உத்தரவில் நீதிமன்றைக் கோரினர். அத்துடன், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி, தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பீற்றர் இளஞ்செழியன், தவிசாளர் க.விஜிந்தன், அருட்தந்தை வசந்தன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி அடித்துடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இராணுவத்தினரும் பொலிஸாரும் கூறியுள்ளனர். அப்படியாயின் நினைவுத்தூபியை அடித்துடைத்தது யார்? பாதுகாப்புப் படையினரின் கண்களுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் யார் வந்தது நினைவுத் தூபியை அடித்துடைத்தார்கள்? பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரிடம் மேற்படி கேள்வியை நான் கேட்க விரும்புகின்றேன்.” - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பி
னரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி இடித்தழிப்புத் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: “போரில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாகவே நினைவுத் தூபி நிறுவப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் மக்கள் அங்கு சென்று நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த அரசு நினைவேந்தல் நிகழ்வை நடத்தத் தடை விதித்தது மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபியையும் அடித்துடைக்க வழியமைத்துக் கொடுத்துள்ளது. ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் தமிழ் மக்களைப் பழிவாங்கும் விதத்தில் செயற்படுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றார்.

யாழில் மரவுரிமை மையம் உதயம்
யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் என்னும் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பை நிறுவுவதற்கு யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியால் 11 நபர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட குறித்த அமைப்பு நேற்று நிறுவப்பட்டுள்ளது. மாநகர மேயரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் தலைவராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டார். பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த அமைப்பு வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் ஆரம்பம்!
முல்லைத்தீவு - குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருந்தூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்காக திங்களிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள முப்படையினர், முப்படைகளின் கட்டளையிடும் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர். எனினும், இந்த நிகழ்வு குறித்து பொலிஸாருக்கோ அல்லது மாவட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவினருக்கோ எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று அந்த துறைகள் சார்பில் பேசவல்லவர்கள் தெரிவித்தனர். அத்துடன், இந்நிகழ்வு முழுமையாக இராணுவத்தினராலேயே ஒழுங்குபடுத்தப்பட்டதாக உள்ளது என்று தெரியவருகின்றது. சைவ மக்களின் வழிபாட்டிடமாக காணப்பட்ட குருந்தூர்மலை பகுதியில் பௌத்த தொல்லியல்கள் உள்ளன என்று கூறி தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் சிலர் அப்பகுதியை தம்வசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆராய்ச்சிகளை பகிரங்கப்படுத்தாமலேயே, அது பௌத்த தொல்லியல் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கவோ அல்லது அங்கு செல்லவோ தமிழ் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீட்டிலிருந்தே நினைவுகூருங்கள்
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் வீட்டிலிருந்தே நினைவு கூருங்கள். நினைவேந்தலை கடைப்பிடிக்க முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதாவார்கள் என்று இராணுவத் தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட் டுள்ளது. நினைவுகூரலுக்காக மக்கள் முள்ளி வாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள், மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைதுசெய்யப்படுவார்கள். இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பவைத்துக் கழுத்தறுத்தது கூட்டமைப்பு
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பதவியை ஒரு வருடத்துக்குத் தமது அமைப்பிற்கு தருவதாகத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளது என வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் குற்றச் சாட்டு முன்வைத்துள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் சி.ஜனார்த்தனன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு மாத்திரம் மலையக மக்கள் சார்பாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஒன்றியத்தின் சார்பில் தனித்து சுயேச்சையாக நாங்கள் போட்டியிட்டிருந்தோம். இதன் மூலம் எமது மக்கள் இரண்டு பிரதிநிதிகளை வழங்கியிருந்தனர். அவ்வாசனங்களின் ஆதரவின் மூலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஊன்றுகோலாக இருந்தது. இது தொடர்பில் நாம் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தையும் மேற்கொண் டிருந்தோம். ஏனெனில் தமிழ் இனம், தமிழ்த் தேசியம் என்ற ரீதியில் எமது இளைஞர்களும் தேசியத்துக்காகப் போராடியிருக்கிறார்கள், பல போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையிலே தமிழ் தெற்கு பிரதேச சபையைப் பேரினவாதக் கட்சிகள் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக் கிலே நாங்கள் இந்த ஆதரவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்தோம். இந்த ஒப்பந்தமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றின் சார்பிலே கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசசபையின் தவிசாளர் பதவி, முதல் மூன்று வருடமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இறுதி ஒரு வருடம் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரெலோ சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் சார்பாக சந்திரகுலசிங்கம், தமிழரசுக்கட்சி சார்பாக வைத்தியர் ப.சத்தியலிங்கமும் மற்றும் எமது அமைப்பு சார்பாக அமைப்பின் தலைவர் எம்.பி.நடராஜாவும் கையொப்பமிட்டுள்ளர். ஆனால் தற்பொழுது மூன்று வருடம் முடிவடைந்த பின்பும் இந்த ஒப்பந்தத்தை மீறி நான்காவது வருடமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்களுக்குள்ளாகவே தவிசாளரை நியமித்துள்ளனர். இதன் மூலமாக இவர்கள் எங்களை ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு ஒரு பிரதேசசபை தவிசாளர் பதவி ஒன்றுக்காகவே இவ்வாறு ஏமாற்று வேலையை செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்திற்காக இவர்கள் எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்தப் போகிறார்கள். அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ளது. இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், தமிழர் காணி அபகரிப்பு, நிரந்தரமாக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள் என்பன பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே அனைத்து சமூகங்களை யும் ஒன்றிணைத்து செயற்படாமல் சிதறிக் காணப்படுவதால் தான் மாற்று இனத்தவர்கள் இங்கு கால் ஊன்றுகின்றனர். எனவே இனிவரும் காலங்களிலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து தமிழ் சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கு முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணியற்ற குடும்பங்கள்
யாழ். மாவட்டத்தில் 10, 135 குடும்பங்கள் காணியற்ற நிலையில் வாழ்கின்றனர். இவ்வாறு காணியற்று வாழும் குடும்பங்களுக்கு மருதங்கேணி பிரதேசத்திலோ அன்றி வேறு மாவட்டங்களிலோ காணி வழங்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளார். பிரதேச செயலாளர்கள் முறையான சிபாரிசு வழங்கும் பட்சத்தில் பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வகையில் ஒருவருக்கு 30 முதல் 40 பேர்ச் (3 முதல் 4 பரப்பு) காணி வழங்க முடியும் என்று காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. காணியற்ற குடும்பங்களுக்கான காணி தேவையை விரைவாக வரையறுப்பதன் மூலம் வீடற்றவர்களின் பிரச்னையை விரைவாக தீர்க்க முடியும். இதற்கு ஒருங்கிணைந்த அடிப்படையில் காணியுடன் தொடர்புடைய அனைவரும் விரைந்த செயல்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
கொவிட் வைரஸ் நிலைமைகளைக் கையாள்வதில் ராஜபக்ச அரசு படுதோல்வியடைந்துள்ளது. தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவ மும், தகுதி இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் அரச நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ள காரணத்தால் இந்தியாவின் நிலை இலங்கைக்கும் ஏற்படும் அச்சம் உள்ளது என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களை நம்பிய பொதுமக்கள் இறுதியாக வீதிகளில் இறந்து கிடக்கும் நிலையை உருவாக்கிவிட வேண்டாம் எனவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்; பின்வருமாறு தெரிவித்தார்: “கொவிட் விடயத்தில் அரசு இப்போதும் பொய்யான தரவுகளையே கூறுகின்றது. ஆனால், அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் இலங்கையில் செப்ரெம்பர் மாதமளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் அரசிடம் இருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்த மறுக்கின்றனர். இப்போதுள்ள நிலைமையில் நாட்டை முறையாக நிர்வகிக்காது விட்டால், ஊழியர்களை முறையாக வழங்க முடியாவிட்டால், குறைந்தது இரண்டு வாரங்களேனும் நாட்டை முடக்காது விட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் போன்றவர்கள் தூரநோக்குடன் இது தொடர்பாகச் சிந்திக்காது போனால் இந்த நாடும் இந்தியாவைப் போன்றதொரு நிலைமையை அடையும். அவ்வாறான நிலையயான்றை உருவாக்க எம்மால் இடமளிக்க முடியாது”.

உயர்தரப்பரீட்சை பெறுபேறு: வடக்கு 6ம் இடம், கிழக்கு கடைசி
கடந்தவாரம் வெளியான 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை கல்வியமைச்சின் மதிப்பீட்டு ஆய்வுப்பகுதி வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி மாகாண அடிப்படையில் முதலிடத்தை வடமேல் மாகாணமும் இறுதி இடத்தை அதாவது ஒன்பதாம் இடத்தை கிழக்கு மாகாணமும் பெற்றுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாணம் ஆறாவது இடத்தை அடைந்துள்ளது. அதேவேளை மாவட்ட வாரியான மதிப்பீட்டில் மோசமான பெறுபேறுகளை உடைய மாவட்டமாக வவுனியா உள்ளது, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகியன இறுதி 5 இடங்களுக்குள் உள்ளன. முழுமையாக அறிக்கையை வாசிக்க: AL 2020 Analysis


கடந்தவார நாளிதழ்களில் இருந்து:
கல்விமுறை பற்றியும் பாடசாலை நெருக்கடி பற்றியும் வந்த சில முக்கியமான கட்டுரைகள்: காலைக்கதிர், Graduates Unemployable, Devi Balika School

வடமாகாண ஆளுனரின் செயற்பாடுகள் குறித்து: Jaffna Governor

போர் முடிந்து 12 ஆண்டுகளின் பின்னர் சிங்களத் தேசியவாதிகளின் பார்வை: Postwar@12
தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02,03, 04

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5