கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்


அரசாங்கத்தின் அடுத்த குறி
நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப் பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீற்றர் உயரமுள்ள தூண்ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட ராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கமைய வவுனியா மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த பகுதி அண்மையில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக குறித்த பகுதியின் கிராம சேவகருக்கோ, அல்லது கிராம மக்களிற்கோ எந்த தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. அங்கு பௌத்த விகாரையுடன் தொடர்புடைய தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், குறித்த பகுதி வர்த்தமானி அறிவுப்பு செய்யப்பட்டு, தொல்பொருள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கை படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன நினைவுச்சின்னம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாகத் தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். காட்டுப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் தொடர்பில் வவுனியா நெடுங்கேணி வீதியில் உள்ள 17 ஆவது விஜயபாகு
படையணி தளபதியால் வவுனியா தொல் பொருள் திணைக்களத்திற்கு தெரிவித்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். அங்கு காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் கி.மு.4 முதல் 8 ஆம் நூற்றாண்டிற்கு
இடைப்பட்டனவாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. தொடர்புடைய முகநூல் பதிவு: Vavuniya Tweet
படங்கள்: Vavuniya 01,02,03,04,05,06
பத்திரிகைச் செய்திகள்: Lankadeepa, Mawbima


நினைவேந்தல் நாடகம்
இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உறுப்பினர்கள் வணக்க நிகழ்வுகளையோ அல்லது வேறு நிகழ்வுகளையோ நடத்துவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் முன்பக்கமாக இருக்கும் சபா மண்டபத்திலேயே நடத்துவது வழமை. அல்லது கூட்டங்கள் நடத்துவதெற்கெனத் தனியான சிறிய, பெரிய குழு அறைகள் உண்டு. அங்கும் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வை நடத்தியிருக்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் தீபம் ஏற்றி முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வை நடத்தியுள்ளனர். இது முற்று முழுதான ஏமாற்றுச் செயற்பாடு. சபா மண்டபத்தில் வணக்க நிகழ்வை நடத்த பாராளுமன்றப் பொலிஸார் தடை விதிப்பார்கள். அல்லது ஏன் தேவையற்ற சிரமம், சிக்கல் என்று இவர்கள் நினைத்திருக்கலாம். அத்துடன் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு வந்துவிடும் என்ற அச்சமும் இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் சபைக்குள் சென்று அமர்ந்திருந்தபோதுகூட முள்ளிவாய்கால் நினைவு என்று எழுதப்பட்ட சுலோகங்களையாவது கைகளில் ஏந்திக் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். அதைக்கூடச் செய்யாமல் கறுப்பு உடையோடு மாத்திரம் சென்றிருக்கிறார்கள். ஆக இலங்கை அரசாங்கத்துக்கும் நோகாமல், தமிழ் மக்களும் தங்களைத் தவறாக நினைத்துவிடாமல், சாதூரியமான முறையில் தமது அலுவலகத்தில் தீபத்தை ஏற்றிவிட்டு அந்தப் படங்களை ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் என்ன நடத்தினாலும் அது பற்றி அரசாங்கமோ, பாராளுமன்றப் பொலிஸாரோ விசாரணை நடத்தமாட்டார்கள். அல்லது அது பற்றி எந்த உறுப்பினர்களும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அது அந்தக் கட்சிக்குரிய சிறப்புரிமை. ஆகவே தமது அலுவலகத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியது சாதனை அல்ல. மக்களுக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தெரியாதென நினைத்து இவர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். சரி, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று ஏன் இவர்கள் பாராளுமன்றத்துக்குப் போனார்கள்? சிவாஜிலிங்கம் நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றியது போன்று அங்கு சென்றிருக்கலாமே? முள்ளிவாய்கால் நினைவு முற்றத்துக்குக் கொஞ்சம் அருகாகச் சென்று வேலன் சுவாமிகள் தீபம் ஏற்றியிருந்தாரே. அதுபோன்று ஏன் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்குச் செல்ல முடியாமல்போனது? பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் தமது ஊர்களில் உள்ள வீடுகளில் அல்லது தத்தமது பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்தாவது தீபம் ஏற்றியிருக்கலாமல்லவா? சரி, அப்படி பாராளுமன்றத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென்றிருந்தால், சபா மண்டபத்தில் அல்லவா அந்த நிகழ்வை நடத்தியிருக்க வேண்டும்? அப்படி நடத்தியிருந்தால் மாத்திரமே அது செய்தி. 2006 ஆம் ஆண்டு மாவீர் நாள் அன்று செல்வராஜா கஜேந்திரன், சபா மண்டப வாசலில் உள்ள படிக்கட்டுகளில் தீபம் ஏற்றினார். தவிர்க்க முடியாத சூழலில் சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் அங்கு ஓடிச் சென்று ஏதோ தாங்களும் சேர்ந்து தீபம் ஏற்றுவதுபோல அன்று படம் காட்டடியிருந்தார்கள். --ஆனால் இன்று கஜேந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் கூட அந்தச் செயற்பாடுகளை ஏன் மறந்தார்கள்? அந்தத் துணிவு ஏன் இன்று இல்லாமல் போனது? 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் சட்டங்களுக்குப் பணிந்து அச்சாப்பிள்ளை அரசியல் நடத்துகிறார்கள்.

வலி வடக்கில் காணிகளை ஊடறுத்து புதிய வீதிகள் அமைப்பு
வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கும் பிரதேசத்தில் பாதுகாப்பு வேலிகளுக்கு உட்புறமாக புதிதாக வீதிகள் அமைக்கப்படுகின்றமை அப்பிரதேசக் காணிகளின் உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வலி. வடக்கில் கட்டுவன், வசாவிளான், குரும்பசிட்டி ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் பிரதேசத்தில் தடுப்பு வேலிகளை அண்டி படையினர் போக்குவரத்துச் செய்யும் குறுகிய பாதைகள் நீண்டகாலமாக காணப்பட்டன. அந்தப் பாதைகள் கூட படையினர் தமது நிலைகளை அவ்வப்போது முன்பின் னாக நகர்த்தி மாற்றும்போது மாறின. இருந்தபோதும் அண்மைய நாள்களாக இத்தகைய பதைகளின அருகே இருந்து பற்றைகள் துப்பரவு செய்யப்படுவது மட்டுமன்றி மேலதிக மண் கொட்டப்பட்டு அவை பெரு வீதியாக அகலிக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் வீதிகளில் கற்கள் பரவப்பட்டு, அவை தார் வீதிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுமா என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகை வீதிகள் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கரின் சுற்று வட்டத்திற்கும் நீண்டு அப் குதிகளிலும் வீதி அமைப்பு பணிகள் இடம் பெறுகின்றன. 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசில் வலி. வடக்குப் பகுதியிலே பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கர் நிலப் பரப்பினையும் நில உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க இணங்கப்பட்டிருந்தது. இப்போதைய நிலையில் இந்தக் காணிகளும் விடுவிக்கப்படுமா என்ற ஐயம் வலுப்பெற்றுள்ளது


பொலிஸ் பாதுகாப்பில் சுட்டுக்கொலை
இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த இருவர் அடுத்தடுத்த நாள்களில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளதுடன் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பொலிஸ் பாதுகாப்பிலிருந்த பாதாள
உலகக்குழுவைச்சேர்ந்த “உரு ஜுவா” என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் “கொஸ்கொட தாரக” என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் அடுத்தடுத்த நாள்களில் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கபதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சட்டத்திற்கு முரணாகத் தண்டனை வழங்கும் போக்கு அதிகரிக்கலாம் என்ற விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. பொலிஸ் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை முறையாகக் கவனிப்பதுடன் அவர்களை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பது, அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதை மறுதலிப்பதாக அமைகின்றது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளையும் நினைவுகூர அனுமதிக்க
இலங்கை இராணுவத்துடன் போரில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்க அங்கத்தவர்களை நினைவுகூர்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும் என இறுதிப்போரின் போது 57வது படையணியின் தளபதி (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். அத தெரண தொலைக்காட்சியினால் ‘வெற்றிமயமான 12ம் வருடம் ‘ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்பவர் ( சதுர டி அல்விஸ்): யுத்தத்தின் போது இந்த நாட்டின் அன்னையர்களுக்கு பிறந்து உயிரிழந்த பிள்ளைகளும் உள்ளனர். போர் நடைபெற்ற வேளை அவர்கள் பயங்கரவாதிகளாக இருந்தார்கள் நீங்கள் பயங்கரவாதத்தைத்தான் இல்லாதொழிந்திருந்தீர்கள். ஆனாலும் அந்த அன்னையர்கள் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்கின்றனர். ஒன்று அவர்களின் புதல்வர்கள் காணமல்போயுள்ளனர். அன்றேல் புதல்வர்களின் மரண அத்தாட்சிப்பத்திரம் கூட இல்லாத நிலை உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்கின்றனர். தீபத்தை ஏற்றுவதற்கும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தத்தின் போது படையணியொன்றுக்கு தலைமைதாங்கியவர் என்ற வகையில் உங்களின் கருத்து என்ன?

பதிலளிப்பவர் ( ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்): நல்ல வேள்வி. தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் காலத்திற்கு பொருத்தமான நல்லதொரு கேள்வி. தவறிப் போன அன்றேல் திசைமாறிய எமது பிள்ளைகள் அன்றேல் சகோதர சகோதரிகள். இந்த நாட்டில் பிறந்த பிரஜைகள் தவறான வழியில் சென்று இந்த நாட்டைப் இரண்டாக கூறுபோடுவதற்கு பயங்கரவாத தலைவர்களுடன் இணைந்து எமக்கெதிராக நேருக்கு நேர் யுத்தம் புரிந்து காயமுற்று உயிரிழந்தவர்கள் இவர்கள் இந்த நாட்டிற்கு உரித்துடைய பிரஜைகளாவர். நான் இல்லாது போனால் எனது தாய்க்கு இருக்கும் அதேவலிதான் அந்தப் பிள்ளையின் தாய்க்கும் இருக்கும். பயங்கரவாதியாக மாறுவது தவறான சிந்தனையினால் அல்லவா ? அந்தவகையில் நாம் (உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை) சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்தாது நாம் எமது சகோதர சகோதரிகளுக்காக நாம் தேசிய மட்டத்தில் அவர்களின் பிள்ளைகளை நினைவுகூருவதற்கு தேசியமட்டத்தில் நாம் ஏற்பாடொன்றைச் செய்யவேண்டும் என நான் எண்ணுகின்றேன்.இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. உயிரிழந்த அன்றேல் காயமுற்றவர்களில் நூற்றுக்கு 95 மானவர்கள் தமது விருப்பின் படி இயக்கத்தில் இணைந்தவர்கள் அல்ல அவர்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டவர்கள். சில தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பார்க்கின்றனர் . இதனை நாம் இல்லாது செய்யவேண்டும். நாம் அந்தப்பெற்றோருக்கு ஆறுதலையும் பலத்தையும் கொடுக்கவேண்டும். பெருமையுடன் சென்று தாம் இழந்த பிள்ளைகளை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் அதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.

சிங்களம் மட்டும் தவறு – பண்டாரநாயக்காவின் புதல்வி
சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை தனது தந்தை எஸ்.டபிள்யு. ஆர். டி . பண்டாரநாயக்க கொண்டுவந்தமையையிட்டு ஆழ்ந்த கவலையடைவதாக சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நியுஸ்பெர்ஸ்டின் பராஸ் ஷாகுட் அலியுடனான நேர்காணிலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நேர்காணலின் போது ‘உங்களது தந்தை சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்காவிட்டால் இந்த நாடு தற்போது செழித்தோங்கியிருக்கும். பறங்கியர்கள் நாட்டைவிட்டுப் போனார்கள். பின்னர் புத்திசாலித் தமிழர்கள் போனார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களே இங்கே மீதமிருந்தனர்’ என ஒருவர் எழுப்பிய கேள்வியை வாசித்து நீங்கள் இதற்குப் பதிலளிக்க விரும்புகின்றீர்களா? என சுனேத்திரா பண்டாரநாயக்கவிடம் கேட்டார் பராஸ்.

அதற்கு ஆம் நான் பதிலளிக்க விரும்புகின்றேன் என சுனேத்திரா கூறினார். அவரது பதில் பின்வருமாறு “அவர் எனது தந்தை. ஆனால் கேள்விகேட்பவர் கூறுவதுடன் நான் உடன்படுகின்றேன். நான் எப்போதுமே இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றேன். நான் கூறுவது பொருத்தமாக இருக்குமோ தெரியாது. ஆனால் உண்மை சொல்லப்படவேண்டும். ஏன் அவர் அப்படிச் செய்தார் என்பதை யாரும் தமக்கேற்றவாறு ஊகிக்கலாம். அது சந்தர்ப்பவாதமாக இருக்கலாம். அன்றேல் தன்னை அரசியல் ரீதியாக பிரபல்யப்படுத்துவதற்காக இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தநபர் கூறுவது உண்மையாகும். அது எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது.” என சுனேத்திரா பண்டாரநாயக்க கூறினார்.
காணொளியைக் காண: https://www.youtube.com/watch?v=NtMoYv5fQAM

கருப்பு பூஞ்சை தொற்று அபாயம்
தற்போது இந்தியாவில் அச்சத்தை விதைத்துவரும் கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே, அம்பாறை பகுதியில் இந்திய ‘கருப்பு பூஞ்சை’ தொற்று பதிவாகியுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தெரிவித்துள்ளார். இது குறித்து அம்பாறை மாவட்டத்தில் பல ஆலோசகர்களுடன் தான் கலந்துரையாடியதாகவும் எனினும் அம்பாறையில் கருப்பு பூஞ்சை பரவுவதை உறுதிப்படுத்த எந்த சம்பவங்களும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் நோய் துரதிர்ஷ்டவசமாக பரவினால் அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நமது அண்டை இந்தியாவில் இந்த நோய் பரவி வரும் நிலையில்இ பூஞ்சை தொற்று இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கொலம்பகே கூறினார். ஆரம்பகால மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பது அறிவுறுத்தலாக இருக்கும் என்றும் ஏனெனில் வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால் எதிர்வினையாற்ற தங்களுக்கு நேரம் இல்லை எனவும் தெரிவித்தார். அந்த பூஞ்சை தொற்றுக்கு எதிராக பயன்படுத்த ‘ஆம்போடெரிசின் பி’ போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன என்றும் ஆனால் நம் நாட்டில் அந்த மருந்துகளின் அளவு போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்து அவற்றை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிக்க வேண்டும் என்று கொலம்பகே கூறினார்.

கொரோனா செய்திகள்
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி முதல் நடைமுறையிலிருக்கும் பயணக்கட்டுப்பாடு செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் அத்தியவசியத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். இந்தக் காலப்பகுதியில் பொது மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கமாறும், மிக அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை பயணத் தடை தளர்த்தப்படுவது உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக மாத்திரமே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய போதும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த அது போதாது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் இனி வரும்காலத்தில் ஊடகங்களுக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டது. கொழும்பிலுள்ள தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணி ஊடாக மட்டுமே வழங்கப்படும் என்று அறியவருகின்றது. இதுவரை காலமும் வடக்கு மாகாணத்தில் - யாழ்ப் பாணத்தின் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தாலும், யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தாலும் ஊடகங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் தொடக்கம் இந்த விபரங்களை அவை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வட்டாரங்களை கேட்டபோது, “இனி வரும் நாட்களில் தேசிய கொரோனா தடுப்புச் செயலணி (கொழும்பு) மட்டுமே குறித்த தகவல்களை வழங்கும் என்றும்,
வடக்கிலிருந்து தகவல்கள் வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார். 14 நாள் போக்குவரத்து கட்டுப்பாடுகளிற்கான விஞ்ஞான ரீதியிலான அவசியத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் அவற்றால் பயன் ஏற்பட்டிருக்கும் எனவும் மூன்று நாள் முடக்கல் என்பது கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் எந்தப் பயனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொறறு; ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன. திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஷ்டப் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன என்று திருகோண மலை பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் டி. ஜி.எம். கொஸ்தா தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் கிடைத்திருக்கின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற செயல்கள் வறுமையின் காரணமாக இலங்கை முழுவதும் நடைபெறுவதாக அறியக் கிடைக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் காலமானார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை தினம் இரவு காலமானார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், இறக்கும்போது 80 வயதாகும். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் அவர் போட்டியிட்டார். அதில் அவர் வெற்றி பெறாதபோதும், 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோண மலை மாவட்டத்தில் போட்டியிட்ட துரைரெட்ணசிங்கம், அதில் வெற்றியடைந்து மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். இவர் அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அவர் மீண்டும் போட்டியிட்டு அதில் தோல்வி யடைந்தபோதும், கூட்டமைப்பின் தேசி யப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

13யை நடைமுறைப்படுத்துக
உண்மையான சமாதானத்தை உறுதி செய்வதற்காக இலங்கை யில் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இன்னும் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் நாடு இன்னும் சுதந்திரமடையவில்லை என்றே அர்த்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். குடந்த புதன்கிழமை அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ஆயுதப் போரை அடுத்து உருவாகியிருக்கும் இந்த சூழலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியினருக்கு பாதுகாப்பு அற்ற தன்மை நிலவுவதாக இருந்தால், தொடர்ந்தும் அநீதி ஏற்படுவதாக அவர்கள் நினைப்பதாக இருந்தால், அந்த பிரச்னைகளுக்கு மத்தியில் எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில்லை. அதனால், அந்த தொகுதியினருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, விசேடமாக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை, தற்போது செயல்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, அந்த மக்கள் தொகுதியினருக்கும் மதத்தவர் களுக்கும் செவிசாய்த்து, அவர் களுடன் கலந்துரையாடி, அவர்களின் பாதுகாப்பற்ற நிலை தொடர்பில் அவர்களது வேண்டுகோள்களுக்கும் செவி சாய்த்து, வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த வெற்றியை, விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்” என்றார்.

 


கடந்தவார நாளிதழ்களில் இருந்து:
காணாமல் போகும் தமிழ்மொழி: Tamil missing

கொக்கிளாய் முதல் குருந்துமலை வரையான பண்பாட்டு இனவழிப்பு: Cultural genocide


தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02,03, 04

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5, 6