கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்


“பட்டினியால் சாகப் போகிறோம்” - முல்லைத்தீவு மக்கள்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கப் போகின்றோமோ இல்லையோ, உணவுக்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, வெகுவிரைவில் சாக போகின்றோம் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா கொத்தணியில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதியன்று முடக்கப்பட்டன. இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 21ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டன. எனினும், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளாந்த கூலித்தொழிலை நம்பிவாழும் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் திடீரென எந்த அறிவித்தலுமின்றி முடக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அத்தியாவசியப் உணவுப்பொருட்கள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலிருக்கும் புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார மக்கள், தாம் கொரோனாவால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இன்றுவரை எந்த உலருணவு பொருள்களும் கிடைக்கவில்லை. தமது பகுதியிலுள்ள சிலர், தமக்கு பிடித்தவர்களுக்கு மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் மூலம் உதவுவுகின்றனர். அவ்வாறான உதவிகளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னிலைப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முடக்கநிலையிலும் தமது கிராமத்தில் ஒன்றுகூடி, வியாழக்கிழமை எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில், அங்கு வந்த பிரதேச செயலக அதிகாரிகள், அவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கவிடாது பார்ப்பதாகவும் உரிய வகையில் உதவித்திட்டங்களை பெற்றுத்தர ஆவண செய்வதாகவும் தெரிவித்தனர். அதனையடுத்தே, அங்கிருந்து மக்கள் களைந்து சென்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரச தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருகின்றது." இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் நேற்று அறிக்கையூடாகத் தெரிவித்துள்ளனர். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான தினேஷ் குணவர்த்தனவுடன் முதற்கட்ட பேச்சை மேற்கொண்டுள்ளார்கள். இதனை, சிறையில் வாடும் எமது உறவுகளின் விடயத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துள்ள ஆரோக்கியமான செயற்பாட்டின் ஆரம்பப் புள்ளியாகவே நாம் காண்கின்றோம். இதனை ஆதரவோடு வரவேற்கின்றோம். ஏனெனில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஆளும் அரசின் அரசியல் விருப்பத்திலேயே தங்கியுள்ளது. விடுதலையை வென்றெடுக்க வேண்டுமாயின் நாம் வேறெங்கும் பேசிப் பயனில்லை. காரணம், நாட்டின் சட்டம் மற்றும் நீதி எனும் காரணப்பெயருக்குள் கட்டுண்டவர்களாகக் கைதிகள் காணப்படுகிறார்கள். இவ்வாறு அணி சேர்ந்து மக்கள் பணியாற்றும் கைங்கரியமானது அரசுக்கும் இதர தரப்புகளுக்கு ஒருமித்த மக்களின் பலப் பிரயோகத்தையும் அவர்களின் விருப்பத்தையும் புரியவைப்பதாக அமையலாம். இத்தகைய பொதுமைப்பண்பின் மூலம் உடனடி அவசியப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டுமானால், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்காக நீண்டகால அரசியல் தீர்வும் இதே போன்று சாத்தியப்படலாம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். அதனை நாம் வரவேற்கின்றோம் வலுப்படுத்துகின்றோம். மொத்தத்தில் அவை மக்களின் குரலே. அதன் அடிப்படையில் அரசியல் கைதிகள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும் காத்திரமானது. அவர்கள் மக்கள் ஆணையின் சிறப்புரிமைக்கமைய சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை நேரடியாகச் சந்தித்து ஆற்ற வேண்டிய கருமங்கள் தொடர்பில் அவதானிக்க முடியும். தவிர அரசின் துறை சார்ந்த அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாட முடியும். ஈற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்தில் கைதிகளின் விடுதலைக்கான பொதுப்பொறிமுறை ஒன்றை முன்வைத்து பேச முடியும். நாடும் அரசம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை முழுமை பெறுமானால் அது அரசுக்குச் சாதகமான பலனையே தரும் என்பதில் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை. ஆகவே, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்" - என்றுள்ளது.

தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம்: அமெரிக்கா எச்சரிக்கை
கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று இலங்கைக்கான புதிய பயணஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் தொடரும் கொரோனா தீரவ நிலைமைகள் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இலங்கைக்கான நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றது. இதேவேளை, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தலில், இலங்கையில் கொரோனா நெருக்கடியிடையே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹோட்டல்கள், போக்குவரத்து நிலையங்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்றுதிரளும் இடங்கள், பல்பொருள் சந்தைகள், விமான நிலையங்கள், கலாசார உற்வச நிகழ்வுகள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் தூர இடங்களில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள், பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதேவேளை, கலிபோர்னியாவில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதி சாந்த சோபன தேரர் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் காணொளித்தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இலங்கையில் தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் பௌத்த மக்களின் வெஷாக் பண்டிகை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஒன்று கூடுகின்ற இடங்களில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் சாந்த சோபன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள தகவலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரத்ன முற்றாக நிராகரித்துள்ளார். அவர் விடுத்துள்ள அவசர ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பயண அறிவுறுத்தலில், இலங்கையை 4ஆம் அடுக்கில் வைத்த அமெரிக்கா, இலங்கைக்கு அமெரிக்கர்கள் யாரையும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நிலைமை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், அவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும், இலங்கை மக்கள் தேவையற்ற பீதிக்குஉள்ளாக வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் யானை தாக்கி இருவர் பலி
கிளிநொச்சி, பூநகரி - ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது மனைவியும் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என்று மரண விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் செவ்வாய் இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது - 52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (வயது - 50) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும், அவரது மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்தனர்.

கொரோனா செய்திகள்
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை, அவ்வாறே, ஜுன் 7ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த நாள்களில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைகளை அவதானிக்கும் போது ஜூன் மாதத்தில் மிக மோசமான விதத்தில் கொவிட் - 19 வைரஸ் பரவல் தாக்க மொன்று ஏற்படும். சுகாதாரத் தரப்பினரால் தாக்குப்பிடிக்க மு யாத அளவிற்கு கொவிட் - 19 வைரஸ் தாக்கங்களுக்கு முகங்கொடுக்க நேரலாம் என அரச மருத் துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது. கொவிட் - 19 வைரஸ் தாக்கங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் -தற்போதுள்ள கொவிட்-19 வைஸ் பரவல் நிலைமைகளை அவதானிக்கும் போது ஜூன் மாதம் மிகவும் மோசமானதாக மாறலாம், மிக மோசமான சுகாதார நெருக்கடிகளை உருவாக்கும் என்ற நிலைN இப்போது தென்படுகின்றது. கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பான நாளாந்த தரவுகளை அவதானிக்கும் போது அடுத்த இரண்டு வாரங்களில் அதிகளவில் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர். இப்போதுள்ள நிலையில் சுகாதார தரப்பினர் மிகவும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது எமக்கு தெரியும். ஆனால் உடனடியாக இறுக்கமான கட்டுப் பாடுகளை விதித்து மக்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். இல்லையேல் சுகாதாரப் தரப்பினரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான விதத்தில் நாட் டின் நிலைமைகள் மாறும். எனவே சுகாதார தரப்பினரும், அரசாங்கமும் மக்களும் நடந்துகொள்ளும் விதத்தில் தான் அடுத்தகட்டமாக நாட்டின் நிலைமை எவ்வாறு மாறும் என்பது வெளிப்படும். அதுமட்டுமல்ல இப் போது எமக்கிருக்கும் மிகப்பெரிய சவால் என்ன வென்றால் சுகாதார துறையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொவிட் - 19 வைரஸ் தொற்றுகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமையாகும். எனவே சுகாதார தரப்பினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதே அடுத்த கட்ட நடவடிக்கைகளை சுகாதார துறையினரை கொண்டு முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் முறைமைக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றோம் என்று இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் கிராம சேவகர்கள் செவ்வாய் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர் என்று இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கோடிக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதும், தற்போது முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இலங்கையில் கொரோனாத் தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது கிராம சேவகர்கள் இரவு - பகலாகப் பணியாற்றினர். எம்மில் ஒருவர் இறந்துள்ளார். மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையைக் கருத்தில் கொண்டு, கிராம சேவகர்களுக்குக் கொரோ னாத் தடுப்பூசிகளை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்ட போதும் இதுவரை அரசால் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முறைகேடாக நடந்துகொண்டுள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது" - என்றார். தடுப்பூசித் திட்டம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தினமும் இனங்காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை திட்டமிட்ட வகையில் குறைத்துக் காண்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பான ஆதாரங்களையும் முன்வைத்துள்ளனர். இம்மாதம் மே 19ம் திகதியன்று இலங்கையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,623 மறுதினம் 20திகதி 3,441 தொற்றாளர்கள் பதிவாகினர். பின்னர் 21ம் திகதி 3583 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மே 21ம் திகதிக்கு பின்னர் இலங்கையில் தினசரி பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,000ஐ தாண்டவில்லை.

பல நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளாகின
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் பல அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், நேற்று (27) வெளியிடப்பட்டது. துறைமுகம், எரிபொருள், பொதுபோக்குவரத்து, மத்தியவங்கி, அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், சேவைகள் மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட பதவிநிலையிலிருக்கும் அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்டவையே அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது, நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மக்களுக்கு ஆகக் கூடிய சேவைகளை வழங்கும் வகையிலேயே, மேலே குறிப்பிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி தங்களுக்கு கிடைக்கவில்லையென்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடளாவிய ரீதியிலுள்ள சகல கிராம சேவகர்களும், கடந்த 26ஆம் திகதி முதல் சட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கடந்தவார நாளிதழ்களில் இருந்து:
வடக்கில் ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்களின் சவால்: Apparel Jaffna


தெரியப்பட்ட இவ்வார டுவீட்கள்: Weekly Tweet-01, 02, 03

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5