கடந்து போன காலம்
(தாயகத்தில் சென்றவாரம் நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு)
பேர்கன்தமிழ் இணையத்தளத்திற்காக வானவரம்பன் வந்தியத்தேவன்


இலங்கையின் கல்வி நெருக்கடி
கொரோனா இலங்கையின் கல்வி அசமத்துவத்தைக் வெளிக்காட்டியுள்ளது. இவை தொடர்பில் சில முக்கியமான ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. பார்க்க: Edu-00, 1, 2, 3, 4, 5

வவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக தரமுயர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிப்படப்பட்டுள்ளது. உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்: Tamil, English

இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் இலங்கை தொடர்பான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 705 அங்கத்தவர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவாகிய அதேவேளை 40 பேர் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கவில்லை. ஐநாவின் இலங்கைதொடர்பான அண்மைய அறிக்கையில் விபரிக்கப்பட்டவாறு இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுகின்றமை கவலைக்குரிய விதத்தில் அதிகரித்துச் செல்வது தொடர்பாக ஆழ்ந்த கரிசனையை இலங்கை குறித்த இந்தத் தீர்மானத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் சந்தேகிக்கின்ற பொதுமக்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்வதற்கும் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பொலிஸாருக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திவருவதற்கு ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டமானது சித்திரவதை பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பலவந்த வாக்குமூலம் அளித்தல் ஆகியவற்றுக்கு வழிகோலுவதான தொடர்ச்சியானதும் போதிய ஆதாரங்களைக் கொண்டதுமான முடிவிற்கு வரமுடிந்துள்ளதாகவும் இந்தத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீர்மானத்தைப் படிக்க: EU resolution on SL

இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது உட்பட மனித உரிமைகளை நாட்டில் பேணுவது தொடர்பான தனது கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றத் தவறுமானால், இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஜி.எல்.பி. வரிச்சலுகையை திரும்பவும் நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் காட்டமாகக் கூறியிருக்கின்றனர். ஏற்கனவே கொவிட் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரம் முழுதாகப்படுத்து விட்டது. அந்நியசெலாவணி சேமிப்பு கரைந்து விட்டமையால் அத்தியாவசியப்பொருள்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத இக்கட்டு. இந்தப்பின்புலத்தில் அந்நிய செலாவணியைத் தேடித் தரும் ஒரு மார்க்கமாக இருப்பது - வசதியாக அமைவது - இந்த ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மட்டுமே. இந்த கொவிட் தொற்று நெருக்கடிகள், முடக்கங்கள், ஊரடங்குகள், பயணக்கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்கு மத்தியிலும் நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகளை முடக்கமின்றித் தொடர்ந்து இயக்குவதில் அரசு அதிக ஈடுபாடு காட்டுகின்றது என்றால் அதற்குக் காரணம் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைப் பயன்படுத்தி, இந்தத் தொழிற்சாலைகள் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதுதான். இலங்கையிலிருந்து தான் இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. முறைமை மூலம் முழு வரிவிலக்கு அளிக்கின்றது. தைக்கப்பட்ட ஆடைகள் என்றில்லை, மீன் வரை இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பல உற்பத்திகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டத்தின் கீμ முழு வரிவிக்கு அளிப்பதால், உலகின் மற்றைய நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு நியாயமான விலையில் அப்பொருள்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்துக்கும் இலங்கை தாராளமாக ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை நாடு ஈட்டுகின்றது. இந்த விசேட வரி விலக்கு சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்குமானால் - இந்த உற்பத்திப் பொருள்களுக்கு உரிய வரியுடன்தான் அவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகுமானால் - அந்த விலையில் - கட்டணத்தில் - பிற நாடுகளுடன் போட்டி போட்டு இந்த உற்பத்திப் பொருள்களை இலங்கையால் வழங்கவே முடியாது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐந்து வருடங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்திருந்தது. அப்போது இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன என்பது தெரிந்ததே. மஹிந்தவின் காலத்தில் ரத்துச்செய்யப்பட்ட ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நல்லாட்சி அரசு கெஞ்சிக் கூத்தாடித்தான் 2017 இல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மீளப் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்காற்றினர் என்பதையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.

பொதுமக்களின் சீற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது என தெரிவித்துள்ள நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நீண்ட நாள் ஆகாது எனவும் அவ்வேளை அந்த இடத்திலேயே ராஜபக்ச அரசாங்கத்தின் குடும்ப ஆட்சி முடிவிற்கு வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் தங்களை அந்த நிலைக்கு தள்ளக்கூடாது என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாதுளவாவே சோபிததேரர் ஆட்சியிலிருந்தவேளை நாட்டின் அதிகாரத்தை தனிநபர் ஒருவரின் கரங்களில் கொடுக்கவேண்டாம் அது நாட்டிற்கு பேரழிவை கொண்டுவரும் என தெரிவிப்பார் என நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருதெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இதுவே இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தனிநபர் ஒருவருக்கு அதிகாரங்களை வழங்கியது தற்போது வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை யில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து “தீர்வுகள் தாமதம் பிரச்சினைகள் முடிவற்றவை. ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமையுடன், வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். நாடு பூராகவும் உள்ள சுகாதார ஊழியர் களின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதர வாக கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன், மதியம் 12 முதல் 12.30 வரை கவனவீர்ப்புப்போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது, “சுகாதாரத் துறையிலுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பயணத்தடை நேரத்தில் அவர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடு, சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்புத் தேவை, சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்று” உள்ளிட்ட பல்வேறு சுலோக அட்டைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவில்நோயாளரின் நன்மை கருதி சுகாதார ஊழியர்கள் சேவை வழங்கிய போதும், ஏனைய நோயாளர் விடுதிகளில் வைத்தியர்களே முழுமையான சேவைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரணிலின் மீள்வருகை ஏற்படுத்தியுள்ள சலசலப்பு
கடந்த சில மாதங்களாக அரசியல் அஞ்ஞாதவாசத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் வரவுள்ள நிலையில், எதிரணிக்குள் சலசலப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலரும் ரணிலுடன் இணைந்து கொள்வார்கள் என்று சில கருத்துக்கள் எட்டிப் பார்க்கின்றன. அவ்வாறான நிலைமை இல்லை, ரணிலை நம்பி, இங்கிருந்து யாரும் செல்லப்போவதில்லை என்று சஜித் தரப்பிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ரணில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பின்னர் அவரே எதிர்கட்சித் தலைவராக மாறிவிடுவார் என்றவாறான அப்பிராயங்களையும் ரணிலின் விசுவாசிகள் முன்வைக்க முயற்சிக்கின்றனர். அரசாங்கத்திற்கு தக்க பாடத்தை புகட்டுவதற்கு தான் தயாராக இருக்கிறாரெனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த அரசியல் சலசலப்புக்களுக்கு மத்தியில் பிறிதொரு தகவலும் வெளியாகியிருக்கின்றது. இவை அனைத்திற்கும் பின்னால் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இருக்கிறாரெனவும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சம்பிக்க ரணவக்க சில மாதங்களுக்கு முன்னர்தான், அவர் சார்ந்திருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து வெளியேறி, ‘43 இயக்கம்’ என்னும் மக்கள் இயக்கமொன்றை ஆரம்பித்தருந்தார். தற்போது அரசியல் ரீதியில், சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து செயல் பட்டுவரும் சம்பிக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டபோதிலும்கூட, இதுவரை அவ்வாறானதொரு பதவி வழங்கப்படவில்லை. இவ்வாறானதொரு சூழலில், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க் கட்சித் தலைவராக்கும் சூழ்ச்சியில் அவர் இறங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

திருச்சி அகதிமுகாம் அகதிகள் உண்ணாவிரதம்
“சிறப்பு முகாம் எனும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்துவிடுங்கள்” எனக் கோரி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும், அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி 175 ரூபாய் வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் 18, 000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த் துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜமுனாராணியிடம் கடந்த வாரம் வழங்கினர். இந்த நிலையில், இவர்கள் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளனர். குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்யமேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொவிட் குளறுபடிகள்
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தினசரி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் தொடர்பான தரவுகளில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சந்திக எபிடகடுவ இது தொடர்பில் தெரிவிக்கையில், ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்யும்போது, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகிறது. ஜூன் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, இலங்கையில் 36,333 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும், ஜூன் 7 ஆம் திகதி இது 31,145 ஆக குறைந்தது. அதாவது 5,188 பேர் குறைந்தனர். சிகிச்சை பெறுபவர்களில் 5,000 க்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், ஜூன் 7 ஆம் திகதி 1,173 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வெளியேறியதாக தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மீதமுள்ள நோயாளிகளுக்கு என்ன ஆனது, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்களா என்று கேள்வி எழுப்பினார். இதே போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வெளி யிடப்படுகின்றன என்றார். 5,000 முதல் 6,000 நோயாளிகள் அடிக்கடி பதிவுகளிலிருந்து காணாமல் போகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்தவார நாளிதழ்களில் இருந்து:
கடலில் பஸ் விடுதல் Bus in the Ocean

இவ்வாரக் கேலிச் சித்திரங்கள்: Cartoon-1, 2, 3, 4, 5, 6, 7

கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராகக் கருத்துரைப்போர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் சுயதணிக்கை செய்கிறார்கள். இதை சமூக வலைத்தளங்களிலும் காணமுடிகிறது. இனி இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் பெரிதாகப் பொதுவெளிக்கு வரப்போவதில்லை. இது எங்கள் இருப்பை அசைக்காதவரை அதைப்பற்றிக் கவலைப்பட அதிகமில்லைத்தானே.

இனிய கோடை விடுமுறைகள்

வானவரம்பன் புறப்படுகிறான்.